திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து அதிகரிக்கும் கள்ளச்சாராய உயிரிழப்புகள்: எடப்பாடி பழனிசாமி

"நீட் தேர்வுக்கு எதிராக திமுக போராட்டம் நடத்துவது வெறும் கண்துடைப்புதான்."
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

குறுவை சாகுபடிக்காக விவசாயிகளுக்குக் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

"குறுவை சாகுபடிக்கான தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விவசாயிகளுக்கு ரூ. 78.67 வழங்கப்படும் என அறிவித்துள்ளார்கள். இதில் ரூ. 24.50 கோடி தேசிய வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதைக் கழித்தால், குறுவை தொகுப்புக்கு ரூ. 54.17 கோடிதான் விவசாயிகளுக்கு கிடைக்கும். இது போதாது.

ஏற்கெனவே, குறுவை சாகுபடி, சம்பா சாகுபடிக்கு முழுமையாகத் தண்ணீர் கிடைக்கவில்லை. நிலத்தடி நீர் குறைந்துள்ளது. ஆகவே, டெல்டா பாசன விவசாயிகள் குறுவை சாகுபடி செய்ய வேண்டுமென்றால், அவர்களுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து அவர்களுக்குத் தேவையான உதவியைச் செய்ய வேண்டும்.

அதிமுக ஆட்சியில் நெற்பயிருக்கு முழுமையாக நீர் பாய்ச்ச, 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால், தற்போது 8, 9 மணி நேரம் தான் மும்முனை மின்சாரம் வழங்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளார்கள். குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், மேலும் சிலர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள் எனச் செய்திகள் வந்துள்ளன. போதைப் பொருள், கள்ளச்சாராயம் உள்ளிட்டவற்றைத் தடுத்து இரும்புக்கரத்துடன் கட்டுப்படுத்த வேண்டும்.

மத்திய ஜல்சக்தித் துறை இணை அமைச்சர் சோமன்னா, கர்நாடக அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தபோது, மேகேதாட்டுவில் அணை கட்டுவோம் என அவர் கூறியதாகச் செய்திகள் வந்திருக்கின்றன. தமிழ்நாட்டுக்கும், கர்நாடகத்துக்கும் இடையே பிரச்னை நிலவி வருகிறது. இந்தச் சூழலில் கர்நாடகத்தைச் சேர்ந்த ஒருவரை மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளது விவசாயிகளுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகம்.

நீட் தேர்வுக்கு எதிராக திமுக போராட்டம் நடத்துவது வெறும் கண்துடைப்புதான். எங்கு போராட்டம் செய்ய வேண்டுமோ அங்கு போராட்டம் செய்ய வேண்டும். நாடாளுமன்றத்தில் அழுத்தமாகக் குரல் கொடுத்து நீட் தேர்விலிருந்து விலக்கு பெற வேண்டும்" என்றார் எடப்பாடி பழனிசாமி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in