கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் மூலம் பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சரயு விளக்கமளித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் தனியார் பள்ளியில் என்சிசி முகாம் நடத்துவதாகக் கூறி என்சிசி பயிற்சியாளர் பள்ளி மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக, என்சிசி பயிற்சியாளர் சிவராமன், பள்ளி முதல்வர் சதீஷ்குமார் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் சிவராமன் என்பவருக்கும் என்சிசி-க்கும் தொடர்பு இல்லை என்பதும் போலியாக என்சிசி முகாம் நடத்தியுள்ளதும் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"அசம்பாவித சம்பவத்தைப் பொறுத்தவரை 11 பேரைக் கைது செய்துள்ளோம். என்சிசியைச் சேர்ந்தவர்கள் என்று கூறி வெளியிலிருந்து வந்தவர்கள் என்சிசி முகாம் நடத்தியுள்ளார்கள். ஆனால், என்சிசி-க்கும் இந்த முகாமுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தத் தகவல் எங்களுக்கு வந்தவுடன் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, முக்கியக் குற்றவாளி உள்பட 11 பேரைக் கைது செய்துள்ளார்கள்.
மேலும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவு மூலம் குழந்தைகளிடம் விசாரணை நடத்தி அவர்களுக்குத் தேவையான உளவியல் ஆலோசனைகள் வழங்கி வருகிறோம். இவர்களுடையப் பெற்றோர்களையும் தொடர்புகொண்டு அவர்களுக்கும் உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
கல்வித் துறை சார்பில் நேற்று முதல் விசாரணை நடைபெற்று வருகிறது. பள்ளியைப் பொறுத்த வரை அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுள்ளன. இதற்கு முன்பு முகாம்கள் விதமீறலுடன் நடத்தப்பட்டுள்ளனவா என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறோம்.
இந்தச் சம்பவத்தைப் பொறுத்தவரை புகார் வந்தவுடன், வழக்கில் தொடர்புடையவர்கள், தகவல் வெளியில் வந்தவுடன் இதை மறைக்க முயற்சித்தவர்கள் என அனைவரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்த வழக்கில் நேற்று வரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இன்று முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படுபவர் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
வேறு சில பள்ளிகளிலும் முகாம்கள் நடத்தப்பட்டுள்ள தகவல் நேற்றைய விசாரணையில் தான் தெரியவந்தது. எந்தெந்த பள்ளிகளில் முகாம்கள் நடத்தியுள்ளார்களோ அந்தப் பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
பள்ளிக் கல்வித் துறை விரிவான அறிக்கையைக் கேட்டுள்ளது. இதற்காக, பள்ளிக் கல்வித் துறை மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு பள்ளியில் ஏதேனும் விதிமீறல் நடந்துள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். இந்தச் சம்பவத்தைப் பொறுத்தவரை என்சிசி முகாம் நடத்தியவர்களின் பின்னணியை விசாரிக்கவில்லை. மேலும், மாணவர்களைக் கொண்டு இதுமாதிரியான முகாம்கள் நடத்தப்படும்போது வழிகாட்டு நெறிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. இதுதவிர விதிமீறல் எதுவும் நடந்துள்ளதா என்பது பற்றியும் விசாரித்து வருகிறோம்.
என்சிசி-க்கும் இவர்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. என்சிசி தரப்பிலும் இதுதொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் என்சிசி மூலம் இந்த முகாம்களை நடத்தவில்லை. வேறு எந்தெந்த பள்ளிகளில் முகாம்களை நடத்தியுள்ளார்கள் என்கிற விவரங்களைச் சேகரித்து வருகிறோம். இதுதொடர்பாகவும் விரிவான விசாரணை நடத்தப்படும்.
அன்றைய நாள் பயிற்சியில் இருந்த அனைத்துக் குழந்தைகளையும் அழைத்துப் பேசியுள்ளோம். இவர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் கொடுக்கப்பட்டுள்ளன. பெற்றோர்களுக்கும் உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம்.
இதுமாதிரியான சம்பவம் யாருக்காவது நிகழ்ந்தால், 1098 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம். இதுபோன்ற சம்பவங்கள் வெளியில் வந்தால்தான் எதிர்காலத்தில் இவற்றைத் தடுக்க முடியும்.
பள்ளிகளைப் பொறுத்தவரை நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றவில்லை. முகாம் நடத்தியவர்களின் பின்னணி சரிபார்க்கப்படவில்லை. பயிற்சி அளிப்பவர்களின் பின்னணி குறித்து விசாரிக்கவில்லை. மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்படவில்லை. இவற்றுக்கும் சேர்த்துதான் நடவடிக்கை எடுத்துள்ளோம்" என்றார் அவர்.