90% வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாகப் பொய் சொல்லி திமுக அரசு மக்களை ஏமாற்றுவதாக அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
"கடந்த 42 மாதகால நிர்வாகத் திறனற்ற திமுக ஆட்சியில் அனைத்துத் தரப்பு மக்களும் அவதியுறுவது உள்ளங்கை நெல்லிக்கனி, எல்லாவற்றிற்கும் மேலாக முத்தாய்ப்பு வைப்பதுபோல் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சுகாதாரத் துறையினர் உள்ளிட்ட அனைவரும், அவர்களது கோரிக்கைகள் எதுவும் இந்த அரசால் நிறைவேற்றப்படாத காரணத்தால் வெகுண்டெழுந்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள்.
தற்போதைய முதல்வர் ஸ்டாலினுக்கு, எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால்தான் அரசு ஊழியர்கள் மீது கரிசனம் வரும் என்றால், 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அவருக்கு எதிர்க்ககட்சித் தலைவர் பதவியை அளிக்க நாங்கள் தயார் என்று அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் வெளிப்படையாக தெரிவித்திருந்ததாக ஊடகங்கள் மற்றும் நாளிதழ்களில் செய்திகள் வந்திருந்தன.
இதுகுறித்து, கடந்த நவம்பர் 10 அன்று திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம், 42 மாதகால திமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மின்வாரியம், போக்குவரத்துத் துறை, கூட்டுறவுத் துறை போன்ற வாரியப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரின் கோரிக்கைகள் தீர்க்கப்படாத நிலையில், அவர்களின் உணர்வுகள்தான் வெளிப்பட்டுள்ளன என்று பதிலளித்தேன்.
என்னுடைய இந்தக் கருத்தில் உள்ள உண்மைகள் சுட்டதால், 7 பக்க மொட்டைக் காகித அறிக்கையை இந்த ஆட்சியாளர்கள் ஊடகங்களுக்கு அனுப்பி உள்ளதாகத் தெரிகிறது. யாருடையப் பெயரும் இல்லாமல், கையெழுத்தும் இல்லாமல், ஊடகங்களுக்கு முக்கியக் குடும்பத்தின் மருமகன் தலைமையில் இயங்கும் பென் என்ற நிறுவனம் இந்த அறிக்கையை அனுப்பி உள்ளதாகத் தெரிகிறது.
2021 தேர்தல் நேரத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, அவர்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்தபிறகு, இன்றைக்கு அவர்களுக்கு பட்டை நாமம் போட்டதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தங்களின் ஆற்றாமையை அரசு ஊழியர்கள்தான் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
2021 பொதுத் தேர்தலின்போது திமுக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் ஒருசில;
வாக்குறுதி எண்: 309
புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வரப்படும்.
வாக்குறுதி எண்: 311
20,000 இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று சம வேலை - சம ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆசிரியர் பணிக் காலத்தில், மேற்படிப்பு முடித்த ஆசிரியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும்.
வாக்குறுதி எண்: 312
ஊதிய உயர்வு - பணி உயர்வு முரண்பாடுகள் குறித்த கோரிக்கைகள் ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டு, விரைவில் நிவாரணம் கிடைத்திட ஆவன செய்யப்படும்.
இந்த வாக்குறுதிகளைத் தவிர, சுமார் 520-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்துவிட்டு, 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று பொய் சொல்லி வரும் இந்த ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர்" என்று எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.