
கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளச்சாராயம் அருந்தியது உயிரிழப்புக்குக் காரணம் எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இருந்தபோதிலும், கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழப்பு நேரிட்டதா என்பது உறுதி செய்யப்பட்ட பிறகுதான் தெரியும் என மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் விளக்கமளித்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதி மக்கள் கள்ளச்சாராயம் குடித்ததே காரணம் என்று கூறி வருவதாகச் செய்திகளில் கூறப்படுகின்றன.
இந்த பாதிப்பைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் புதுச்சேரியிலுள்ள ஜிப்மர் மருத்துவமனையில் மற்றும் அருகிலிருக்கும் வேறு சில மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டார்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பலரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இரவு 10.30 மணி நேர நிலவரப்படி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பெயரில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் கள்ளக்குறிச்சி செல்கிறார்கள். ஜிப்மர் மருத்துவமனை தவிர்த்து, வேறு சில மருத்துவமனைகளில் மொத்தம் 40 பேர் வரை அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
முன்னதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் முறையே கள்ளச்சாராயம் ஆறாய் ஓடுவதாகவும், உயிரிழப்புக்குப் பொறுப்பான மதுவிலக்குத் துறை அமைச்சர் முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அறிக்கை வெளியிட்டார்கள்.