ஒசூர் - பெங்களூரு இடையே மெட்ரோ ரயில்: ஆய்வைத் தொடங்கிய சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்

"பொம்மசந்திரா முதல் ஒசூர் வரை மொத்தம் தோராயமாக 23 கி.மீ. நீளத்திற்கு, 12 மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் ஒரு பணிமனையை உள்ளடக்கியதாக இது அமையும்."
படம்: https://x.com/cmrlofficial
படம்: https://x.com/cmrlofficial
1 min read

ஒசூர் - பெங்களூரு இடைய விரைவான போக்குவரத்து அமைப்பை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையைத் தயாரித்து வருவதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:

"சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி மற்றும் தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்தபடி, அத்திபள்ளி வழியாக ஒசூர் முதல் பொம்மசந்திரா வரை விரைவான போக்குவரத்து அமைப்பை (எம்ஆர்டிஎஸ்) அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்த விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை இறுதி செய்வதற்கான ஒரு நடவடிக்கையாக, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ. சித்திக், இ.ஆ.ப., இன்று (27.08.2024) பெங்களூர் மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் எம். மகேஷ்வர் ராவ், இ.ஆ.ப., அவர்களை பெங்களூர் மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் சந்தித்து, ஒசூர் முதல் பொம்மசந்திரா வரை உள்ள மெட்ரோ பாதையின் முக்கிய அம்சங்களைப் பற்றி ஆலோசனை நடத்தினார்.

இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி. அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர் டி. லிவிங்ஸ்டோன் எலியாசர் (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), பெங்களூர் மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் ஆர்.கே.ரெட்டி, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், பெங்களூர் மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் ஆலோசகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் குழுவினர் மற்றும் ஆலோசகர்கள் ஒசூர் பகுதிகளை நேரடியாகப் பார்வையிட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் கே.எம்.சரயு, இ.ஆ.ப., மற்றும் ஒசூர் மாநகராட்சி ஆணையாளர் எச்.எஸ். ஸ்ரீகாந்த், இ.ஆ.ப.,ஓசூர் துணை ஆட்சியர் பிரியங்கா இ.ஆ.ப., ஆகியோரை சந்தித்து விரிவான ஆலோசனை நடத்தினர்.

அத்திபள்ளி வழியாக பொம்மசந்திரா முதல் ஒசூர் வரை மொத்தம் தோராயமாக 23 கி.மீ நீளத்திற்கு, தமிழ்நாட்டில் 11 கி.மீ. மற்றும் கர்நாடகத்தில் 12 கி.மீ. நீளம் கொண்ட இந்த பாதை 12 மெட்ரோ இரயில் நிலையங்கள் மற்றும் ஒரு பணிமனையை உள்ளடக்கியதாக அமையும். இந்தக் கூட்டத்தில் விரைவான போக்குவரத்து அமைப்பை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், ஒசூர் மற்றும் பெங்களூரு இடையேயான போக்குவரத்து இணைப்பு மேம்ப்படுத்தப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in