தென்காசியில் லோடு ஆட்டோ கவிழ்ந்து மூன்று பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் இருந்து ஆனைக்குளம் என்ற பகுதிக்கு விவசாயப் பணிக்காக லோடு ஆட்டோவில் பலர் பயணித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சுரண்டை - வாடியூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஆட்டோ முன்பு தீடீரென நாய் ஒன்று குறுக்கே வந்ததாகவும், ஆட்டோ ஓட்டுநர் வாகனத்தை நிறுத்த முயற்சித்த போது கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.
இதில் மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 12 நபர்கள் காயமடைந்து தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து சரக்கு வேன், லாரிகள் ஆகியவற்றில் மக்களை ஏற்றினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற இடங்களில் வாகன சோதனையை தீவிரப்படுத்தவும் நெல்லை சரக டிஐஜி மூர்த்தி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.