`ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்கக் காசு இல்லை, ஆனால் கார் பந்தயம் நடத்த மட்டும் காசு எங்கிருந்து வருகிறது’ என்று தூத்துக்குடியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பினார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் பேசியவை பின்வருமாறு:
`ஃபார்முலா 4 பந்தயத்தில் கார் ஓட்டுவது யார்? விளையாட்டு யாருக்கானதாக இருக்க வேண்டும்? நான் படிக்கும் காலத்தில் விளையாடுவதற்குத் திடல் இருக்காது. எனவே கைப்பந்து, கால்பந்து போன்றவற்றை விளையாடவோ, ஓடிப் பழகவோ எங்களால் முடியாது. இதைப்போல என் காசில் சிற்றூரில் படிக்கும் திறன் உள்ள பிள்ளைகளுக்குப் பயிற்சி அளித்து அவர்களை விளையாட்டு வீரர்களாக மாற்றினால் சரி.
அய்யா சிவந்தி ஆதித்தன் ஒலிம்பிக் சங்கத்தில் இருக்கும்போது பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார். அது போல நீங்கள் ஏதாவது செய்து கொடுத்திருக்கிறீர்களா? இந்தக் கார் பந்தயத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடியில் இருக்கும் யாராவது கலந்து கொள்கிறார்களா? பந்தயக் கார் ஓட்டுகிறவர்கள் சோழவரத்தில் இருக்கும் திடலில் ஓட்டிக்கொள்ள வேண்டியது தானே?
பந்தயம் நடைபெறும் பாதையில் இரண்டு அரசு மருத்துவமனைகள் இருக்கின்றன. அய்யா எடப்பாடி உட்பட நாங்கள் அனைவரும் வேண்டாம் என்கிறோம். எங்கு பார்த்தாலும் மது விளம்பரங்கள் இருக்கிறது என்று அய்யா அன்புமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அது மேல்தட்டு மக்களின் விளையாட்டு. அதைக் கொழுத்த பணத்திமிர் இருப்பவர்கள் விளையாடுகிறார்கள். விளையாடுங்கள், வேண்டாம் என்று கூறவில்லை. தம்பி சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் பேசியதைப் போல ஓரமாகப் போய் விளையாடுங்கள். அவ்வளவு போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திவிட்டு யார் என்னைக் கேள்வி கேட்பார்கள் என்ற திமிரில் விளையாடுகிறீர்கள்.
நீங்கள் தரையில் கார் அல்ல, கப்பலைக் கூட விடுங்கள். நாங்கள் கேட்கவில்லை. எத்தனை நாட்கள் விடுவீர்கள் என்று பார்க்கிறோம். இதெல்லாம் அநியாயம். சாலைகள் எல்லாம் குண்டும் குழியுமாக இருக்கிறது, அதைச் சீரமைக்கப் பாருங்கள். பள்ளிக்கூடங்களைச் சீரமைப்பது பற்றி யோசியுங்கள். ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்கக் காசு இல்லை. ஆனால் கார் பந்தயம் நடத்த மட்டும் காசு எங்கிருந்து வருகிறது?’ என்றார்