பஞ்சாப்-ஹரியானா மாநிலங்களின் எல்லைப் பகுதியான ஷம்புவில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 31) கலந்துகொண்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட், ஒரு மகளாக விவசாயிகள் போராட்டத்தில் துணை நிற்பதாகப் பேசியுள்ளார்.
கடந்த பிப்ரவரி 13-ல் இருந்து 200 நாட்களாக ஷம்புவில் இருந்தபடி பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த தில்லிக்குக் கிளம்பிய பஞ்சாப் விவசாயிகள், ஹரியானாவுக்குள் நுழையாதவாறு ஷம்பு பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே அங்கிருந்தவாறே விவசாயிகள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஷம்புவுக்குச் சென்ற வினேஷ் போகாட், `உங்கள் போராட்டம் 200 நாட்களாக நடைபெறுகிறது. உங்களின் உரிமை, நீதி என நீங்கள் எதற்காகப் போராடி வருகிறீர்களோ அது கிடைக்க நான் கடவுளிடம் பிராத்திக்கிறேன். உங்கள் மகள் உங்களுடன் நிற்பேன். அரசாங்கத்திடம் நான் வலியுறுத்துகிறேன். நாங்களும் இந்த நாட்டின் குடிமக்கள்தான். நீங்கள் அதைக் கேட்க வேண்டும். அவர்கள் (விவசாயிகள்) சட்டவிரோதமாக எதையும் கேட்கவில்லை’ என்று பேசினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் வினேஷ் போகாட். அப்போது அரசியலில் ஈடுபடுவீர்களாக என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, `நான் ஒரு வீராங்கனை. நான் இந்த முழு தேசத்துக்கும் பொதுவானவள்.
எந்த மாநிலத்துக்குத் தேர்தல் நடைபெறப்போகிறது என்பது எனக்கு அவசியமில்லாதது. என் நாடு துன்பத்தில் உள்ளது என்பது எனக்குத் தெரியும். விவசாயிகளுக்கு பிரச்னைகள் உள்ளன, அவற்றை முதலில் தீர்க்க வேண்டும். அரசாங்கத்தின் முன்னுரிமையாக அதுவே இருக்க வேண்டும்’ என்றார்.