திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பா?: ஆய்வகத்தின் முடிவு சொல்வது என்ன?

ஆய்வகத்தால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நெய் மாதிரிகள் திருப்பதி லட்டில் இருந்து சேகரிக்கப்பட்டதா என்பது குறித்த எந்த ஒரு உறுதியான தகவலும் இல்லை
திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பா?: ஆய்வகத்தின் முடிவு சொல்வது என்ன?
1 min read

திருப்பதி லட்டில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டிருப்பதாகக் கூறி பரிசோதனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி.

ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின்போது திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில், நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு உள்ளிட்ட சுகாதாரமற்ற மூலப்பொருட்களைப் பயன்படுத்தியதாக, நேற்று (செப்.18) ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியிருந்தார்.

சந்திரபாபு நாயுடுவின் இந்தக் குற்றச்சாட்டிற்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யும், முன்னாள் திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவருமான ஒய்.வி. சுப்பா ரெட்டி மறுப்பு தெரிவித்திருந்தார். மேலும் மனிதனாகப் பிறந்த யாரும் இப்படிப்பட்ட குற்றச்சாட்டை முன்வைக்கமாட்டார்கள் என சந்திரபாபு நாயுடுவை அவர் சாடியிருந்தார்.

இந்நிலையில் இன்று, 16 ஜூலை 2024-ம் தேதியிட்ட தேசிய பால் வள மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஆய்வகத்தின் பரிசோதனை அறிக்கை ஒன்றை வெளியிட்டார் தெலுங்கு தேசம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வெங்கட ரமணா ரெட்டி.

ஆய்வகத்துக்குக் கிடைத்த நெய் மாதிரிகள் மீது ஆய்வகம் மேற்கொண்ட பரிசோதனையில், நெய்க்கு பதிலாக மீன் எண்ணெய், சோயா, சூரிய காந்தி, பாமாயில், மாட்டுக்கொழுப்பு, பன்றிக்கொழுப்பு உள்ளிட்ட கொழுப்புப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அந்தப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் அந்த நெய் மாதிரிகள் திருப்பதி லட்டில் இருந்து சேகரிக்கப்பட்டதா என்பது குறித்த எந்த ஒரு உறுதியான தகவலும் இல்லை. மேலும் தெலுங்கு தேசம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட இந்த அறிக்கை குறித்தும், அதன் நம்பகத்தன்மை குறித்தும் ஆந்திர அரசோ அல்லது திருமலா திருப்பதி தேவஸ்தானமோ உரிய விளக்கத்தை இதுவரை வழங்கவில்லை.

தெலுங்கு தேசம் கட்சி செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட பரிசோதனை அறிக்கை
தெலுங்கு தேசம் கட்சி செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட பரிசோதனை அறிக்கை

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in