கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு இன்று (ஆகஸ்ட் 27) கொல்கத்தாவில் உள்ள மேற்கு வங்க அரசின் தலைமைச் செயலகத்தை நோக்கி நடத்தப்பட்ட மாணவர் பேரணியில் கலவரம் நடந்தது. இதை அடுத்து கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களைக் கலைத்தனர் காவல்துறையினர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவர் கடந்த ஆகஸ்ட் 9-ல் கருத்தரங்க கூடத்தில் சடலமாக மீட்கப்பட்டார். இந்தக் கொலை வழக்கு தொடர்பாக தன்னார்வலராகப் பணியாற்றி வந்த சஞ்சய் ராய் என்ற நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளார்.
இந்தக் கொலை வழக்கு தொடர்பாக கொல்கத்தாவில் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் இது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையில் நடந்துவருகிறது.
இந்நிலையில் பெண் பயிற்சி மருத்துவர் கொலைக்குப் பொறுப்பேற்று முதல்வர் மமதா பானர்ஜி பதவி விலகக்கோரி பஸ்சிம்பங்கா சத்ரோ சமாஜ் என்ற மாணவர் அமைப்பு தலைமைச் செயலகம் நோக்கிப் பேரணியை நடத்தியது. சந்த்ராகாச்சியில் தொடங்கிய பேரணி தலைமைச் செயலகத்தை நெருங்கியதும் போராட்டக்காரர்கள் கலவரத்தில் ஈடுபட்டார்கள்.
தலைமைச் செயலகத்தின் பாதுகாப்புக்காகப் போடப்பட்டிருந்த தடுப்புகள் மீது ஏறியும், அவற்றை இழுத்துச் சென்றும், பாதுகாப்புக்காக நின்றுகொண்டிருந்த காவல்துறையினர் மீது கற்களை வீசியும் போராட்டக்காரர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீச்சியடித்தும், தடியடி நடத்தியும் கலைத்தனர் காவல்துறையினர்.