12 மற்றும் 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள் இணைப்பு மற்றும் ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு ஆகியவற்றின் பிரீமியம் மீது விதிக்கப்படும் 18 சதவீத ஜிஎஸ்டி வரி குறைப்பு போன்றவை குறித்து ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு அறிக்கை வழங்க அமைக்கப்பட்ட அமைச்சரவை குழுக்கள் இன்று (அக்.19) ஆலோசனை நடத்துகின்றன.
ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு ஆகியவற்றின் பிரீமியங்கள் மீது தற்போது 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இதைக் குறைப்பது தொடர்பாக ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு அறிக்கை வழங்கும் நோக்கில் பீஹார் நிதி அமைச்சர் சாம்ராட் சௌத்ரி தலைமையில் 13 உறுப்பினர்களை கொண்ட மாநில நிதி அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது.
இன்று கூடும் இந்த அமைச்சரவை குழுவானது, இந்த விவகாரம் தொடர்பான முடிவை எடுத்து, அக்டோபர் இறுதியில் நடைபெறவுள்ள ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் அதை அறிக்கையாக சமர்ப்பிக்க உள்ளது. மேலும் ஆயுள் காப்பீடு, மூத்த குடிமக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கான மருத்துவக் காப்பீடு ஆகியவற்றின் மீது விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரி குறித்தும் இந்தக் குழு அறிக்கை அளிக்கவுள்ளது.
2023-2024 நிதியாண்டில் மருத்துவக் காப்பீட்டின் பிரீமியம் மீது விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி.யின் மூலம், சுமார் ரூ. 8,262.94 கோடி மத்திய மாநில அரசுகளுக்கு வருமானம் கிடைத்தது.
மேலும் 12 மற்றும் 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி விகிதங்களை இணைத்து ஒருங்கிணைந்த ஒரு புதிய ஜி.எஸ்.டி. வரி விகிதத்தை உருவாக்கும் நோக்கில், பீஹார் நிதியமைச்சர் சாம்ராட் சௌத்ரி தலைமையில் அமைக்கப்பட்ட மற்றொரு அமைச்சரவைக் குழுவும் இன்று ஆலோசனை நடத்துகிறது.
12 சதவீத ஜி.எஸ்.டி. வரி விகித பட்டியலில் தற்போது உள்ள மிதிவண்டி, மருந்துகள், பாட்டில் குடிநீர் உள்ளிட்ட பொருட்களை 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விகித பட்டியலுக்குள் கொண்டு செல்வது குறித்தும் இந்த அமைச்சரவைக் குழு ஆலோசித்து ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு அறிக்கை அளிக்கிறது.