விவசாயிகள் போராட்டம் பற்றி கங்கனா பேசியது கட்சியின் கருத்தல்ல: பாஜக

"கட்சியின் கொள்கை குறித்து அதிகாரப்பூர்வ கருத்துகளைத் தெரிவிக்க கங்கனா ரணாவத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை."
கோப்புப்படம்
கோப்புப்படம்
1 min read

விவசாயிகள் போராட்டம் பற்றி பாஜக எம்பி கங்கனா ரணாவத் பேசியது கட்சியின் கருத்தல்ல என பாஜக விளக்கமளித்துள்ளது.

தில்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்துக்கு எதிராக மத்திய அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்காமல் இருந்திருந்தால், வங்கதேசத்துக்கு ஏற்பட்ட நிலைமைதான் இந்தியாவுக்கும் ஏற்பட்டிருக்கும் என்ற வகையில் பாஜக எம்பி கங்கனா ரணாவத் ஒரு கருத்தைப் பதிவிட்டிருந்தார். இதற்கு பாஜக தலைவர்கள் சார்பில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.

பஞ்சாப் பாஜக தலைவர் ஹர்ஜித் கிரெவால் கூறுகையில், "விவசாயிகள் பற்றி பேசுவது கங்கனாவின் பணியல்ல. இது அவருடையத் தனிப்பட்ட கருத்து. பிரதமர் மோடியும், பாஜகவும் விவசாயிகளிடம் நட்புறவில் உள்ளது. நமக்கு எதிராக எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. கங்கனாவின் கருத்தும் இதைதான் செய்கிறது" என்றார்.

இந்த நிலையில், கங்கனா ரணாவத் கருத்துக்கு பாஜக சார்பில் அதிகாரப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அவருடையத் தனிப்பட்ட கருத்து என்றும் பாஜக விளக்கமளித்துள்ளது.

இதுதொடர்பாக பாஜக தெரிவித்துள்ளதாவது:

"விவசாயிகள் போராட்டம் பற்றி பாஜக எம்பி கங்கனா ரணாவத் கூறிய கருத்து கட்சியின் கருத்து கிடையாது. இவருடையக் கருத்தில் பாஜக முரண்படுகிறது. கட்சி சார்பாக கட்சியின் கொள்கை குறித்து அதிகாரப்பூர்வ கருத்துகளைத் தெரிவிக்க கங்கனா ரணாவத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்க்க வேண்டும் என கங்கனா ரணாவத்துக்கு பாஜக அறிவுறுத்தியுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in