26 வயது அன்னா செபாஸ்டியன் மஹாராஷ்டிர மாநிலத்தின் புனேவில் செயல்பட்டுவரும் பன்னாட்டு நிதி ஆலோசனை நிறுவனமான எர்ன்ஸ்ட் அண்ட் யங்கில் பட்டயக் கணக்காளராக கடந்த மார்ச்சில் பணிக்குச் சேர்ந்தார். இந்நிலையில் கடந்த ஜூலை 20-ல் பணி முடிந்து விடுதிக்கு திரும்பிய அன்னா செபாஸ்டியன் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து அன்னா பணிபுரிந்த எர்ன்ஸ்ட் அண்ட் யங் நிறுவனத்துக்கு அவரது தாயார் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், `உங்கள் நிறுவனத்தில் சேர்ந்து பணிபுரிய அன்னா மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார். ஆனால் நிறுவனத்தில் இணைந்த 4 மாதங்களிலேயே அதிக பணிச்சுமையால் அவர் உயிரிழந்துள்ளார். அன்னாவின் இறுதிச்சடங்குக்கு உங்கள் நிறுவனத்தில் இருந்து யாரும் வரவில்லை.
அவரது மேலாளருக்கு தகவல் கொடுத்தும்கூட எந்தப் பதிலும் இல்லை. எனது குழந்தையின் உயிரிழப்பு நிறுவனத்தின் மாற்றத்துக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறேன்’ என்று உருக்கமாக எழுதியிருந்தார். அன்னா தாயார் எழுதிய இந்தக் கடிதம் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டது. இதுதொடர்பாக பொதுமக்கள் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டனர்.
இதைத் தொடர்ந்து எர்ன்ஸ்ட் அண்ட் யங் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் அன்னா தாயாரின் கடிதத்தைத் தீவிரமாக எடுத்துக்கொள்வதாகவும், அன்னாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக எர்னஸ்ட் அண்ட் யங் நிறுவனத்தின் இந்தியத் தலைவர் ராஜீவ் மேமானி பதிலளித்துள்ளார். அதில், `அன்னாவின் இறுதிச்சடங்கில் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கலந்துகொள்ளாதது அவர்கள் கலாசாரத்துக்கு அந்நியமானது. ஒரு தந்தையாக அந்தத் தாயின் வேதனையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அவருடைய குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்.
சமூக ஊடகங்களில் எங்கள் நிறுவனத்தின் பணி நடைமுறைகள் குறித்துப் பொதுமக்கள் கருத்து தெரிவித்ததை அறிந்தேன். எங்கள் நிறுவன ஊழியர்களின் நல்வாழ்வே முக்கியம். இந்த பிரச்னையை தனிப்பட்ட முறையில் தீர்க்க வழிவகுப்பேன். இணக்கமான பணியிடத்தை வளர்த்தெடுப்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அந்த நோக்கத்தை நிறைவேற்றும்வரை ஓய்வெடுக்கமாட்டேன்’ என்றார்.