நாடு முழுவதும் பணியாற்றும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ள மத்திய சுகாதார அமைச்சகம், இது தொடர்பாக குழு அமைக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்த மௌமிதா மருத்துவமனை வளாகத்திலேயே கடந்த வாரம் கற்பழிக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிக்க சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.
இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தகுந்த சட்டத்தை நிறைவேற்றக் கோரி மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம். செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளவை பின்வருமாறு:
`கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவருக்கு எதிரான சம்பவத்தைத் தொடர்ந்து தில்லி அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளின் உறைவிட மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபோர்டா), இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) ஆகியவற்றின் பிரதிநிதிகள் மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகளை சந்தித்து பணியிடத்தில் மருத்துவர்கள் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்த கோரிக்கையை முன்வைத்தனர்.
அப்போது மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அது தொடர்பாக பரிந்துரைக்கவும் ஒரு குழுவை அமைக்க சுகாதார அமைச்சகம் அவர்களிடம் உறுதியளித்தது. மாநில அரசுகளும், இந்த சங்கங்களின் பிரதிநிதிகளும் தங்கள் ஆலோசனைகளை குழுவுடன் பகிர்ந்து கொள்ள அழைக்கப்படுவார்கள்’