மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ள மூன்று நபர்களையும், ஐந்து கூடுதல் நீதிபதிகளையும், சென்னை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலிஜியம் இன்று (செப்.10) பரிந்துரைத்துள்ளது.
மாவட்ட நீதிபதிகள் ஆர்.பூர்ணிமா, அகஸ்டீன் தேவதாஸ் மரியா க்ளாட் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத் தலைமைப் பதிவாளர் என்.ஜோதிராமன் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்ற கொலிஜியம் இன்று பரிந்துரை செய்துள்ளது.
மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது கூடுதல் நீதிபதி அந்தஸ்தில் பணியாற்றி வரும் விக்டோரியா கௌரி, பி.பி. பாலாஜி, கே.கே. ராமகிருஷ்ணன், ஆர். கலைமதி, கே. திலகவதி கோவிந்தராஜன் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கவும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் இன்று பரிந்துரை செய்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ள நீதிபதிகள் எண்ணிக்கை 75 ஆகும். இதில் 56 நிரந்தர நீதிபதிகளும், 19 கூடுதல் நீதிபதிகளும் பணியாற்றலாம். ஆனால் செப்.01 நிலவரப்படி கூடுதல் நீதிபதிகளையும் சேர்த்து தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் 62 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.
உச்ச நீதிமன்ற கொலிஜியத்தின் பரிந்துரை மத்திய அரசால் ஏற்கப்பட்டால் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 65 ஆக உயரும்.