கடந்த ஜூலை மாதம் அதிக அளவிலான வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது பி.எஸ்.என்.எல். நிறுவனம். அதே நேரம் ஏர்டெல், வி.ஐ. (வோடஃபோன்-ஐடியா), ஜியோ நிறுவனங்கள் கணிசமான வாடிக்கையாளர்களை இழந்துள்ளன.
கடந்த ஜூலை மாதத்தில் ஏர்டெல், வி.ஐ., ஜியோ தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்களது சேவைக் கட்டணங்களை 11 முதல் 25 சதவீதம் வரை உயர்த்தின. ஆனால் பி.எஸ்.என்.எல். நிறுவனம் சேவைக் கட்டணத்தை உயர்த்தவில்லை. இதனைத் தொடர்ந்து பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு கணிசமான அளவில் வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ளனர்.
தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, கடந்த ஜூலை மாதத்தில் 29.3 லட்சம் வாடிக்கையாளர்கள் ஈர்த்துள்ளது பி.எஸ்.என்.எல். நிறுவனம். அதேநேரம் ஏர்டெல் 16.9 லட்சம் வாடிக்கையாளர்களையும், வி.ஐ. 14.1 லட்சம் வாடிக்கையாளர்களையும், ஜியோ 7.5 லட்சம் வாடிக்கையாளர்களையும் இழந்துள்ளன.
இதனால் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 8.85 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும் 5ஜி சேவையை பி.எஸ்.என்.எல் நிறுவனம் இன்னமும் வழங்கவில்லை, சில பகுதியில் மட்டும் 4ஜி சேவையைத் தொடங்கியுள்ளது. ஆனால் 45.9 லட்சம் அளவிலான புதிய பிராட்பேண்ட் இணைப்புகளை ஜூலை மாதத்தில் வழங்கியுள்ளது பி.எஸ்.என்.எல். நிறுவனம்.
ஜூலை மாதத்தின் இறுதியில் சுமார் 94.61 கோடி பிராட்பேண்ட் இணைப்புகள் இந்தியாவில் உள்ளன. இதில் 98 சதவீத இணைப்புகள் ஜியோ, ஏர்டெல், வி.ஐ., பி.எஸ்.என்.எல்., அட்ரியா கன்வெர்ஜென்ஸ் ஆகிய நிறுவனங்கள் வசம் உள்ளன.