
தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) மூத்த தலைவர் பாபா சித்திக் மும்பையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பாந்த்ராவிலுள்ள (கிழக்கு) மகனும் எம்எல்ஏவுமான ஸீஷன் அலுவலகம் வெளியே சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் 3 நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். காரில் ஏற முற்பட்டபோது பலமுறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் சித்திக் படுகாயமடைந்தார். இவரை லீலாவதி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, நாடித்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் இல்லை எனத் தெரிகிறது. மருத்துவர்கள் கடுமையாக முயற்சித்தபோதிலும், சித்திக்கைக் காப்பாற்ற முடியவில்லை. இரவு 11.27 மணியளவில் சித்திக் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
துப்பாக்கிச் சூட்டில் பாபா சித்திக் தவிர வேறு யாரும் காயமடையவில்லை என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சித்திக்குக்கு அச்சுறுத்தல் இருப்பதாகத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, 15 நாள்களுக்கு முன்பு அவருக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. 24 மணி நேரமும் தனிப் பாதுகாவலர் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
சல்மான் கானுக்கு நெருக்கமானவராக அறியப்படுவதால், இவருடையக் கொலையின் பின்னணியில் லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலுக்குத் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள். இந்தக் கொலை தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து மஹாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது:
"பாபா சித்திக் மீதான துப்பாக்கிச் சூடு மிகவும் துரதிருஷ்டவசமானது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவர் உத்தரப் பிரதேசத்திலிருந்தும் மற்றொருவர் ஹரியாணாவிலிருந்தும் வந்துள்ளார்கள். மூன்றாவது குற்றவாளியைக் காவல் துறையினர் தேடி வருகிறார்கள்" என்றார்.
காங்கிரஸில் மூத்த தலைவராக இருந்த பாபா சித்திக் 48 ஆண்டுகால உறவை முறித்துக்கொண்டு, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸில் கடந்த பிப்ரவரியில் இணைந்தார். 1999, 2004 மற்றும் 2009 என தொடர்ச்சியாக மூன்று முறை மஹாராஷ்டிர சட்டப்பேரவைக்குத் தேர்வாகியுள்ளார் சித்திக்.
சரத் பவார் தரப்பு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறுகையில், நிலைமை மோசமாக இருப்பதாகக் கூறினார். துணை முதல்வர் அஜித் பவார் எக்ஸ் தளப் பக்கத்தில், நல்ல நண்பரை இழந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.