பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவரும் இளநிலை மருத்துவர்களுக்கு ஆதரவாக ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் 50 மூத்த மருத்துவர்கள் இன்று (அக்.08) ஒரே நேரத்தில் தங்கள் பணியை ராஜினாமா செய்துள்ளனர்.
கொல்கத்தாவின் ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த 31 வயதான பெண் பயிற்சி மருத்துவர், கடந்த ஆகஸ்ட் 9-ல் மருத்துவக் கல்லூரியின் கருத்தரங்கக் கூடத்தில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக விசாரித்து வரும் சிபிஐ, நேற்று (அக்.08) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
கொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவருக்கு உரிய நீதி, பணியில் இருக்கும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு, பணியிடங்களில் கழிவறை வசதி, காலியாக உள்ள மருத்துவர்கள் பணிடங்களை துரிதமாக நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் பணிபுரியும் 8 இளநிலை மருத்துவர்கள் கடந்த அக்.5-ல் தொடங்கி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இளநிலை மருத்துவர்களை இன்று (அக்.08) சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்த ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் 50 மூத்த மருத்துவர்கள் தங்களின் பணிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவரும் இளநிலை மருத்துவர்கள் குறித்து நேற்று (அக்.07) பேசிய மேற்கு வங்க தலைமைச் செயலாளர் மனோஜ் பண்ட், `மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் 90 சதவீத பணிகள் அடுத்த மாதம் நிறைவு பெறும். அனைவரையும் பணிக்குத் திரும்புமாறு கோரிக்கை விடுக்கிறேன்’ என்றார்.