பாரிஸ் ஒலிம்பிக்ஸில் தான் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து, விளையாட்டுத் துறைக்கான நடுவர் மன்றத் தீர்ப்பாயத்திடம் வினேஷ் போகாட் முறையிட்டுள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிச் சுற்று வரை முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகாட் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அனுமதிக்கப்பட்ட 50 கிலோ எடையைக் காட்டிலும் 100 கிராம் கூடுதலாக இருந்ததாகக் கூறி வினேஷ் போகாட் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இறுதிச் சுற்றுக்கு முன்னேறியதால், குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்திருந்த நிலையில், எந்தப் பதக்கமும் இல்லாமல் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், ஒட்டுமொத்த நாடும் ஏமாற்றமடைந்தது.
இந்த நிலையில், தான் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக விளையாட்டுத் துறைக்கான நடுவர் மன்றத் தீர்ப்பாயத்திடம் வினேஷ் போகாட் மேல்முறையீடு செய்துள்ளார். மேல்முறையீட்டு மனுவில் தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரத்தில் வினேஷ் போகாட்டுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கப்படும் பட்சத்தில், அவருக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.