ஐபிஎல் 2025: புதிய விதிமுறைகள் வெளியீடு

சர்வதேச ஆட்டங்களுக்கு 5 வருடங்கள் தேர்வாகாத இந்திய வீரர், அன்கேப்டு வீரராகக் குறிப்பிடப்படுவார்.
ஐபிஎல் 2025: புதிய விதிமுறைகள் வெளியீடு
1 min read

ஐபிஎல் புதிய விதிமுறைகள் குறித்து பிசிசிஐ தலைமையகத்தில் கடந்த ஜூலை மாதம் 10 ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பெங்களூருவில் இன்று ஐபிஎல் ஆட்சிமன்ற நிர்வாகக் குழு கூடி, ஐபிஎல் 2025-2027 விதிமுறைகள் குறித்து முடிவு செய்தது.

ஐபிஎல் ஆட்சிமன்ற நிர்வாகக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள்

  • தக்கவைத்தல், ஆர்டிஎம் முறைகளில் ஓர் அணி அதிகபட்சம் 6 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம்

  • வீரர்கள் தக்கவைத்தல் - அதிகபட்சமாக 5 சர்வதேச அனுபவம் கொண்ட வீரர்கள் (உள்நாடு & வெளிநாடு), அதிகபட்சமாக இரு சர்வதேச அனுபவம் இல்லா வீரர்கள்

  • ஏலத்தில் ஒவ்வொரு அணிக்கும் தலா ரூ. 120 கோடி ஒதுக்கீடு

  • ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக - ஓர் ஐபிஎல் ஆட்டத்தில் விளையாடும் வீரர் (இம்பாக்ட் வீரர் உள்பட) ஆட்ட ஊதியமாக ரூ. 7.5 லட்சம் பெறமுடியும்

  • இம்பாக்ட் விதிமுறை 2027 வரை தொடரும்

  • சர்வதேச ஆட்டங்களுக்கு 5 வருடங்கள் தேர்வாகாத இந்திய வீரர், அன்கேப்டு வீரராகக் குறிப்பிடப்படுவார்

  • எந்தவொரு வெளிநாட்டு வீரராக இருந்தாலும், ஐபிஎல் மெகா ஏலத்தில் பதிவு செய்ய வேண்டும். ஒருவேளை ஐபிஎல் மெகா ஏலத்தில் வெளிநாட்டு வீரர் பதிவு செய்யவில்லையெனில், தொடர்ந்து அடுத்தாண்டில் நடைபெறும் வீரர்கள் ஏலத்தில் பங்கெடுக்க முடியாது

  • ஏலத்தில் பதிவு செய்துவிட்டு, ஏலத்தில் தேர்வானவுடன் போட்டி தொடங்குவதற்கு முன்பு போட்டியிலிருந்து விலகினால், எந்தவொரு வீரராக இருந்தாலும் அடுத்த இரு ஐபிஎல் பருவங்களில் விளையாடுவதற்கும் வீரர்கள் ஏலத்தில் பங்கெடுப்பதற்கும் தடை விதிக்கப்படும்

அன்கேப்டு வீரர் விதியில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் எம்எஸ் தோனியை ரூ. 4 கோடிக்குத் தக்கவைப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர் கடைசியாக 2019 உலகக் கோப்பை அரையிறுதியில் விளையாடினார்.

மேலும், வெளிநாட்டு வீரர்கள் மெகா ஏலத்தில் பங்கெடுக்காமல் மற்ற ஏலத்தில் பங்கெடுப்பதன் மூலம் நிறைய தொகைக்கு ஏலம் போவதாகக் குற்றச்சாட்டுகள் இருந்து வந்தன. மேலும், சில வீரர்கள் ஏலத்தில் தேர்வான பிறகு போட்டிகளிலிருந்து விலகுவதாகவும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in