பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிச் சுற்றில் விளையாடவிருந்த இந்திய வீராங்கனை வினேஷ் போகாட், யாரும் எதிர்பாராதவகையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகாட் நேற்று காலிறுதிக்கு முந்தைய சுற்று, காலிறுதிச் சுற்று, அரையிறுதிச் சுற்றில் விளையாடினார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உலகின் நெ.1 வீராங்கனையான ஜப்பானைச் சேர்ந்த சுசாகியை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதி பெற்றார். வீழ்த்த முடியாத வீராங்கனையாக வலம் வந்த சுசாகியை வினேஷ் போகாட் வீழ்த்தியது பதக்கத்துக்கு இணையான சாதனையாகக் கருதப்பட்டது.
காலிறுதிச் சுற்றில் 7-5 என்ற கணக்கில் உக்ரைன் வீராங்கனை ஒக்சானாவைத் தோற்கடித்து அரையிறுதிக்குத் தகுதி பெற்றார். அரையிறுதிச் சுற்றில் 5-0 என கியூப வீராங்கனை யுஸ்லேனிஸைத் தோற்கடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்தார். மல்யுத்தத்தில் இந்தியாவுக்குப் பதக்கம் உறுதியானது. மேலும், மல்யுத்தத்தில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
இறுதிச் சுற்றில் இந்திய நேரப்படி ஆகஸ்ட் 8 அதிகாலை 12.45 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெறவிருந்தது. இந்த நிலையில், 50 கிலோ எடையைக் காட்டிலும் 100 கிராம் அளவில் கூடுதல் எடையில் இருந்ததால், வினேஷ் போகாட் பாரிஸ் ஒலிம்பிக்ஸிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
போட்டி விதியின்படி, தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் வினேஷ் போகாடுக்கு வெள்ளிப் பதக்கமும் கிடைக்காது. மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் மட்டுமே வழங்கப்படும்.
இறுதிச் சுற்றில் அமெரிக்காவின் சாரா ஹில்டேபிராண்டை எதிர்கொள்ளவிருந்தார் வினேஷ் போகாட்.
இதுதொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கம் கூறியுள்ளதாவது:
"மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவில் வினேஷ் போகாட் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இரவு முழுக்க கடுமையான முயற்சிகளை மேற்கொண்டபோதிலும், இன்று காலை 50 கிலோவைவிட சில கிராம் கூடுதல் எடையில் இருந்தார்.
தற்போதைய சூழலில் இதுதொடர்பாக மேற்கொண்டு கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. வினேஷ் போகாடின் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.