பாரிஸ் ஒலிம்பிக்ஸில் மகளிர் மல்யுத்தம் போட்டியில் தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கக் கோரி வினேஷ் போகாட் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் ஆகஸ்ட் 16-ல் தீர்ப்பு வழங்கப்படுகிறது.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிச் சுற்று வரை முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகாட் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததாகக் கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
வினேஷ் போகாட் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியதால், குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்திருந்த நிலையில், எந்தப் பதக்கமும் இல்லாமல் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், ஒட்டுமொத்த நாடும் ஏமாற்றமடைந்தது.
இதன் பிறகு விளையாட்டுத் துறைக்கான நடுவர் மன்றத்திடம், தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கக்கோரி வினேஷ் போகாட் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் பாரிஸ் ஒலிம்பிக்ஸ் நிறைவடைவதற்குள் தீர்ப்பு வழங்கப்படும் என முன்பு தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 10 அன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், வினேஷ் போகாட் மனு மீதான தீர்ப்பு மீண்டும் ஆகஸ்ட் 13-க்கு ஒத்திவைக்கப்பட்டது.
இன்றிரவு 9.30 மணிக்குத் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வினேஷ் போகாட் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் ஆகஸ்ட் 16 அன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.