
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இலங்கை வீரர் துஷ்மந்தா சமீரா விலகியுள்ளார்.
இந்திய அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 ஆட்டங்களில் பங்கேற்பதற்காக இலங்கைக்குச் சென்றுள்ளது. இத்தொடர் ஜூலை 27 அன்று தொடங்கி ஆகஸ்ட் 7 வரை நடைபெறவுள்ளது.
டி20 ஆட்டங்கள் அனைத்தும் பல்லேகலேவிலும், ஒருநாள் ஆட்டங்கள் அனைத்தும் கொழும்புவிலும் நடைபெறவுள்ளன.
இந்நிலையில் டி20 தொடருக்கான இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கடந்த ஜூலை 12 அன்று இலங்கை அணியின் டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து ஹசரங்கா விலகினார். இந்நிலையில் அசலங்கா தலைமையில் களமிறங்குகிறது இலங்கை அணி.
இதில் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா சமீராவும் இடம் பெற்றிருந்தார். இந்நிலையில் அவர் காயம் காரணமாக விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒருநாள் அணியிலும் அவர் இடம் பெறமாட்டார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக மாற்று வீரர் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.
சமீபத்தில் நடைபெற்ற எல்பிஎல்லில் கேண்டி ஃபேல்கன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த நிலையில், இவர் ஒரு ஆட்டத்தில் கூட விளையாடவில்லை. எனவே, அவருக்கு எப்போது காயம் ஏற்பட்டது என்பது குறித்து எந்த தகவலும் தெரியவில்லை.