புச்சி பாபு கிரிக்கெட் போட்டியில் மும்பை அணியை 286 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது டிஎன்சிஏ லெவன் அணி.
புச்சி பாபு கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 15 அன்று தொடங்கியது.
இந்நிலையில் டிஎன்சிஏ லெவன் - மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கோவை ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இதில், டிஎன்சிஏ லெவன் அணி முதல் இன்னிங்ஸில் 379 ரன்களும், மும்பை அணி 156 ரன்களும் எடுத்தன.
இதைத் தொடர்ந்து 2-வது இன்னிங்ஸில் டிஎன்சிஏ லெவன் அணி 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் பிறகு 510 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் மும்பை அணி விளையாடியது.
டிஎன்சிஏ லெவன் அணியின் சிறப்பான பந்துவீச்சால் மும்பை அணி 223 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ஷம்ஸ் முலானி 68 ரன்கள் எடுத்தார். சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன் மூலம் டிஎன்சிஏ லெவன் அணி 286 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
முன்னதாக முதல் இன்னிங்ஸில் சாய் கிஷோர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எனவே இந்த ஆட்டத்தில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் அவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
அரையிறுதியில் டிஎன்சிஏ லெவன் - சத்தீஸ்கர் அணிகளும், டிஎன்சிஏ பிரெசிடெண்ட்ஸ் - ஹைதராபாத் அணிகளும் விளையாடுகின்றன. செப்டம்பர் 2-5 வரை இந்த ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.