‘கொட்டுக்காளி’ டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பேசுப்பொருளாக மாறியுள்ளது.
இயக்குநர் வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னா பென் போன்றோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொட்டுக்காளி’. இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார்.
இப்படம் ஆகஸ்ட் 23 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
இதில் பேசிய சிவகார்த்திகேயன், “நான் யாரையும் கண்டுபிடித்து, இவர்களுக்கு நான் தான் வாழ்க்கை கொடுத்தேன் என்றெல்லாம் சொல்லமாட்டேன். என்னை அவ்வாறு சொல்லிச் சொல்லி பழக்கப்படுத்திவிட்டார்கள். அது போன்ற நபர் நான் இல்லை” என்று பேசியிருந்தார்.
இதைத் தொடர்ந்து இந்த கருத்துக்கு ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தனுஷின் ‘3’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் படம், சிவகார்த்திகேயன் வாழ்கையில் திருப்புமுனையாக அமைந்தது.
இதன் பிறகு அவர் வளர்ந்து வந்த நாட்களில் அவரிடம் பலரும் தனுஷ் தான் உங்களுக்கு வாழ்க்கை கொடுத்தாரா? என்ற கேள்வியை அவ்வப்போது எழுப்பினர்.
இந்நிலையில் கொட்டுக்காளி டிரைலர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசியது ரசிகர்கள் மத்தியில் பேசுப்பொருளாக மாறியுள்ளது.
கடந்த ஆண்டுகளில் தனுஷைப் பாராட்டி சிவகார்த்திகேயன் பேசிய காணொளிகளையும், தனுஷ் தனது வாழ்க்கையில் யாருக்கெல்லாம் உதவி செய்தார் என்பதையும் குறிப்பிட்டு தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், சிவகார்த்திகேயன் தனுஷைக் குத்திக் காட்டி பேசினாரா அல்லது விஜய் தொலைக்காட்சியை கருத்தில் கொண்டு பேசினாரா என்றும் கேள்விகளை எழுப்பியுள்ளனர். ஒரு சில ரசிகர்கள், தான் செய்த உதவியை தனுஷ் சொல்லிக்காட்ட கூடாது என்று சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.