தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமண விழாவில் நடிகர் ரவி மோகன் பாடகி கெனிஷா ஃபிரான்சிஸுடன் கலந்துகொண்டது பேசுபொருளாகியுள்ளது.
நடிகர் ரவி மோகன் கடந்த செப்டம்பரில் மனைவி ஆர்த்தியை விட்டு பிரிவதாக சமூக ஊடகப் பக்கங்களில் அறிவித்தார். தொடர்ந்து, நவம்பரில் விவாகரத்து கோரி சென்னை நீதிமன்றத்தில் முறையிட்டார் ரவி மோகன். இந்த வழக்கில் மத்தியஸ்தத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரவி மோகன் - ஆர்த்திக்கு ஆரவ் மற்றும் அயான் என இரு மகன்கள் உண்டு.
இதனிடையே ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் பகிரப்பட்டன. டிடி நெக்ஸ்டுக்கு கடந்தாண்டு அளித்த பேட்டியில், ரவி மோகனுடனான உறவு குறித்து கெனிஷா விளக்கமளித்தார். ரவி மோகனின் மனநலம் சார்ந்த பிரச்னைக்காக தொழில்முறையாக மட்டுமே இருவருக்கிடையே பழக்கம் என கெனிஷா விளக்கமளித்தார்.
இந்நிலையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமணம் சென்னையில் நடைபெற்றது. இதில் ஏராளமான திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டார்கள். நடிகர் ரவி மோகனும் இதில் கலந்துகொண்டார். இவர் கெனிஷாவுடன் வந்து இதில் கலந்துகொண்டது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. அதுவும் இருவரும் ஏறத்தாழ ஒரே நிறத்தில் உடையணிந்து வந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இருவரும் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.