சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில், உடல்நலக்குறைவால் நடிகர் ரஜினிகாந்த் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டார்.
ரஜினியின் வேட்டையன் படம் வருகிற அக். 10 அன்று வெளியாக உள்ளது. இதனிடையே, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், உடல்நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில், ரஜினி நேற்றிரவு அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, ரஜினியின் மனைவி லதா, `அனைத்தும் நலம்' என நியூஸ் 18 சேனலிடம் தெரிவித்துள்ளார்.
ரஜினியின் அடிவயிற்றில் உள்ள ரத்த நாளங்களில் ஏற்பட்ட வீக்கத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர் ஓய்வில் உள்ளதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக இன்று (அக்.1) காலை புதிய தலைமுறை செய்தி வெளியிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து 2-3 நாள்களில் ரஜினிகாந்த் வீட்டுக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக தன் எக்ஸ் சமூக வலைதள கணக்கில் பதிவிட்டுள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் `மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன்’ என்றார்.