லப்பர் பந்து படம் மூலம் நிறைய மரியாதயை சம்பாதித்ததாக அப்படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தினேஷ், ஹரிஷ் கல்யாண், காளி வெங்கட் உள்பட பலர் நடிப்பில் கடந்த செப். 20 அன்று வெளியான படம் ‘லப்பர் பந்து’.
இப்படத்தில் விஜயகாந்தின் தீவிர ரசிகராக வரும் கெத்து தினேஷ் என்கிற கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக ‘நீ பொட்டு வெச்ச தங்கக் குடம் ஊருக்கு நீ மகுடம்’ என்கிற பாடல் இப்படத்தில் பயன்படுத்தப்பட்டதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் இப்படத்தின் வெற்றி குறித்து தமிழரசன் பச்சமுத்து, “லப்பர் பந்து படம் வெளியாகும் வரைதான் அது என்னுடைய படமாக இருந்தது. தற்போது எல்லோரும் படத்தை கொண்டாடுவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ஊடகங்களின் ஆதரவுக்கு நன்றி. விஜயகாந்தை கொண்டாட வேண்டும் என்று நினைத்தேன். எனவே கதைக்கு ஏற்ற இடத்தில் அவர் இருக்கும் காட்சிகளை பயன்படுத்தினேன். முடிந்தவரை, என்னுடைய அனைத்துப் படங்களிலும் விஜயகாந்தை கொண்டாடுவேன். அடுத்தப் படத்தை பொறுத்தவரை எந்த இடத்தில் விஜயகாந்த் காட்சிகளை வைக்க வேண்டும் என்பது கதையைப் பொறுத்துதான் இருக்கும். இப்படம் மூலம் நிறைய மரியாதயை சம்பாதித்தேன்”.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.