என்னைப் பலிகடா ஆக்கவேண்டாம்: ஆர்த்தி ரவி மீது கெனிஷா சாடல்
ஒரு மனநல ஆலோசகராக ஆர்த்தி மற்றும் அவரது பெற்றோருடன் ஜெயம் ரவி போராடியதைக் கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன் என்று பாடகி கெனிஷா தெரிவித்துள்ளார்.
ஜெயம் ரவி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் மனைவி ஆர்த்தியுடனான திருமண வாழ்விலிருந்து விலகுவதாக செப். 9 அன்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து விவாகரத்து குறித்து ஜெயம் ரவி தன்னிச்சையாக முடிவு எடுத்ததாக ஆர்த்தி ரவி அறிக்கை வெளியிட்டார்.
இதன் தொடர்ச்சியாக பாடகி கெனிஷா என்பவருடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக ஜெயம் ரவி தனது திருமண வாழ்விலிருந்து விலகியதாக வதந்திகள் பரவின.
இதற்கு பதிலளித்த ஜெயம் ரவி, “யாரையும் என் தனிப்பட்ட வாழ்க்கையில் இழுக்காதீர்கள். என் தனிப்பட்ட வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கையாகவே இருக்கட்டும். கெனிஷா, ஒரு மனநல ஆலோசகர். நானும் அவரும் சேர்ந்து வருங்காலத்தில் மனநல மையம் ஒன்றைத் தொடங்குவதே எங்கள் நோக்கம்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் டிடி நெக்ஸ்டுக்கு பேட்டியளித்த கெனிஷா, “ஜெயம் ரவியின் மணமுறிவுக்கு நான் காரணமல்ல. அவர் என் நண்பர். ஆர்த்தியுடனான திருமண உறவால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மீள்வதற்காக என்னிடம் தெரபி எடுத்துக்கொள்ள கடந்த ஜூன் மாதம் என்னைத் தொடர்புகொண்டார் ஜெயம் ரவி. விவாகரத்துக்கு விண்ணப்பித்த பிறகே, சென்னையில் யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக என்னிடம் சிகிச்சைக்கு வந்தார்.
என் பெற்றோரை இழந்த வலியை விடவும் ஜெயம் ரவிக்கு அவருடைய குடும்பத்தால் ஏற்பட்ட வலி அதிகம். ஆர்த்தி மற்றும் அவருடைய பெற்றோருடன் ஜெயம் ரவிக்கு ஏற்பட்ட போராட்டம் குறித்துக் கேட்பது வலி மிகுந்தது. அதுபோன்ற இழிவை யாரும் எதிர்கொள்ளக் கூடாது.
என்னுடைய சிகிச்சை அமர்வுகளில் கேட்டதை வைத்து ஜெயம் ரவின் அனுமதியுடனோ அனுமதியில்லாமலோ என்னால் எல்லா ஆதாரங்களையும் சட்டத்தின் முன் நிறுத்த முடியும். ஜெயம் ரவிக்கு, தான் செய்ததை எண்ணி ஆர்த்தி பயந்தால், அதனை மறைக்க என்னைப் பலிகடாவாகப் பயன்படுத்த முடியாது. எனக்கும் ஜெயம் ரவிக்கும் இடையே காதல் என்பது ஊடகங்களின் கற்பனைகள். எங்களுடைய எல்லைகளை இருவரும் அறிவோம். வருங்காலத்தில் எங்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்கு ஊடகங்களே பொறுப்பு” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தனது இன்ஸ்டாகிராமில், “மற்றவர்களின் பிரச்னையை உங்கள் சொந்த பிரச்னையாக பார்க்கும் அனைவருக்கும் ஒரு பணிவான வேண்டுகோள்.
முதலில், இது உங்களது பிரச்னை இல்லை, எனவே அதிலிருந்து விலகி இருங்கள். இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்க உங்களுக்கு அனுமதியில்லை. இதை நான் பணிவுடன் சொல்கிறேன்.
இரண்டாவதாக, என்னை அதிலிருந்து விலக்கி விடுங்கள். எனக்கு வேலை இருக்கிறது. தேவையற்ற வாக்குவாதங்களை நான் தவர்க்க நினைக்கிறேன்.
இறுதியாக, அனைவரிடமும் அன்பாக இருங்கள். உலகிற்கு தேவைப்படும் ஒரே விஷயம் அதுதான்.
இது குறித்து இனி நான் எந்த ஊடகத்திலும் பேச மாட்டேன். இதுவே எனது கடைசி கருத்து” என்று தெரிவித்துள்ளார்.