ஆர்த்தியின் வீட்டில் உள்ள தனது உடைமைகளை மீட்டுத்தர கோரி அடையாறு காவல் நிலையத்தில் ஜெயம் ரவி புகார் அளித்துள்ளார்.
ஜெயம் ரவி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் மனைவி ஆர்த்தியுடனான திருமண வாழ்விலிருந்து விலகுவதாக செப். 9 அன்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து விவாகரத்து குறித்து ஜெயம் ரவி தன்னிச்சையாக முடிவு எடுத்ததாக ஆர்த்தி ரவி அறிக்கை வெளியிட்டார்.
இதன் தொடர்ச்சியாக பாடகி கெனிஷா என்பவருடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக ஜெயம் ரவி தனது திருமண வாழ்விலிருந்து விலகியதாக வதந்திகள் பரவின.
இதற்கு பதிலளித்த கெனிஷா, “ஜெயம் ரவியின் மணமுறிவுக்கு நான் காரணமல்ல. அவர் என் நண்பர். ஆர்த்தி மற்றும் அவருடைய பெற்றோருடன் ஜெயம் ரவிக்கு ஏற்பட்ட போராட்டம் குறித்துக் கேட்பது வலி மிகுந்தது” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஆர்த்தியின் வீட்டில் உள்ள தனது கார் உள்பட அனைத்து உடைமைகளையும் மீட்டுத்தர கோரி அடையாறு காவல் நிலையத்தில் ஜெயம் ரவி புகார் அளித்துள்ளார்.
இது குறித்த புகாரில், ஆர்த்தி தன்னை வீட்டிற்குள் அனுமதிக்காததால் தனது உடைமைகளை காவல் துறை மீட்டுத்தர வேண்டும் என்று ஜெயம் ரவி குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஆர்த்தி மறுப்பு தெரிவித்த நிலையில், இருவரும் கலந்துரையாடி ஒரு முடிவை எடுக்கும்படி காவல் துறை அறிவித்துள்ளது.