பிரபல தொகுப்பாளினி டிடி, முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளதாகவும், விரைவில் குணமடைந்து அனைவரையும் சந்திக்கவுள்ளதாகவும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
கடந்த சில வருடங்களாகவே தனக்குக் காலில் பிரச்னை இருப்பதாக டிடி அவ்வப்போது வெளிப்படையாகப் பதிவு செய்து வந்துள்ளார். இதன் காரணமாக நிறைய நிகழ்ச்சிகளின் வாய்ப்பு பறிபோனதாகக் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம், சில சமயங்களில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும்போது தன்னுடையப் பிரச்னையை உணர்ந்து தனக்குப் பிரத்யேகமாக இருக்கை வழங்கி உதவியிருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தான் முழு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் டிடி.
"கடந்த மூன்று மாதங்கள் எனக்கு சற்று கடினமானவை. இரு மாதங்களுக்கு முன்பு, முழங்காலில் முக்கியமான அறுவை சிகிச்சை ஒன்று செய்தேன். ஆம், முழு முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளேன். கடந்த 10 ஆண்டுகளில் என்னுடைய வலது முழங்காலில் மேற்கொள்ளப்படும் 4-வது அறுவை சிகிச்சை இது. வலது முழங்காலில் இதுவே என்னுடையக் கடைசி அறுவை சிகிச்சையாக இருக்க வேண்டும் என வேண்டுகிறேன், பிரார்த்திக்கிறேன்.
மிகுந்த வலியுடன் மீண்டு வந்தாலும், நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளேன். மீண்டு வர கடுமையாக உழைத்து வருகிறேன். என் நலன் விரும்பிகளுக்காகவும் எனக்கு எப்போதும் ஆதரவளித்தவர்களுக்காகவும் அறுவை சிகிச்சை முடிந்து இரு மாதங்களுக்குப் பிறகு இதைப் பதிவிடுகிறேன். அளவற்ற இந்த அன்பைக் கண்டு இன்றும் வியந்து வருகிறேன். இத்தனை ஆண்டுகளாக எனக்காகப் பிரார்த்தனை செய்தவர்களுக்கும், பணியில் உதவியவர்களுக்காகவும் மனதிலிருந்து மிகப் பெரிய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இருள் நிறைந்த நாள்களிலும் இதுதான் என்னை இயங்க வைத்தது.
இந்த வலியால் கசப்பான மனிதராக மாறிவிடக் கூடாது என எனக்கு நானே கூறிக்கொள்வேன். உங்களுடைய அன்பும் எனக்கு உதவுகிறது. தற்போது ஒளி தெரிகிறது. நான் வலிமையுடன் (ஏற்கெனவே வலிமையுடன்தான் உள்ளேன்) மீண்டு வருவேன்.
மிக முக்கியமாக இதற்குக் காரணமாக இருந்த மருத்துவர்கள் அனைவருக்கும் என்னைக் கவனித்துக்கொண்ட நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், என்னுடன் துணை நின்ற குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் பெரிய நன்றிகள்.
இறுதியாக ஒன்று. நான் எங்கேனும் நடந்து செல்வதைப் பார்த்தால், கடுமையான இந்த 10 ஆண்டுகளில் எனக்கு வாழ்த்து தெரிவித்திருந்தால், வந்து என்னைச் சந்தியுங்கள். எனக்கான ஆசிகளைக் கணக்கில் கொள்வேன்.
வலிமை பெற்று வருகிறேன். விரைவில் உங்களைச் சந்திக்கிறேன். புதிய முழங்காலுடன் புதிய நான்" என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிடி குறிப்பிட்டுள்ளார்.