தி கோட் படத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் விஜயகாந்த் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், விஜய் உள்ளிட்ட படக் குழுவினர் பிரேமலதாவைச் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்கள்.
விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள படம் தி கோட். ஏஜிஎஸ் நிறுவனம் படத்தைத் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் செயற்கை தொழில்நுட்பம் (ஏஐ) மூலம் மறைந்த நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. பிரேமலதா விஜயகாந்த், விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் இந்தத் தகவலை இடையில் உறுதி செய்தார்கள்.
இதன் தொடர்ச்சியாக படத்தின் டிரைலர் இரு நாள்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. டிரைலர் வெளியீட்டை முன்னிட்டு தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு செய்தியாளர்களைச் சந்தித்தார்கள். அப்போது, ஏஐ தொழில்நுட்பம் விஜயகாந்த் காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளதா என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள். இதற்குப் பதிலளித்த இயக்குநர் வெங்கட் பிரபு, விஜயகாந்த் காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளதை உறுதி செய்தார்.
இந்த நிலையில் விஜய், அர்ச்சனா கல்பாத்தி, வெங்கட் பிரபு ஆகியோர் பிரேமலதா மற்றும் குடும்பத்தினரை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்துக்குச் சென்று நேரில் சந்தித்துள்ளார்கள். விஜயகாந்த் காட்சிகளை ஏஐ தொழில்நுட்பம் மூலம் படத்தில் பயன்படுத்த அனுமதி வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்தச் சந்திப்பு நடந்ததாகத் தெரிகிறது.
சந்திப்பு குறித்து பிரேமலதா விஜயகாந்த் எக்ஸ் தளப் பக்கத்தில், "சற்று முன் நடிகர் விஜய், சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் மரியாதை நிமித்தமாக என்னை நேரில் சந்தித்தார்!" என்று குறிப்பிட்டுள்ளார்.