ஒருவரின் நற்பெயரைப் புண்படுத்தும் வகையிலான விவாதங்களில் நான் ஈடுபட மாட்டேன் என ஆர்த்தி ரவி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜெயம் ரவி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் மனைவி ஆர்த்தியுடனான திருமண வாழ்விலிருந்து விலகுவதாக செப். 9 அன்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து விவாகரத்து குறித்து ஜெயம் ரவி தன்னிச்சையாக முடிவு எடுத்ததாக ஆர்த்தி ரவி அறிக்கை வெளியிட்டார்.
இதன் தொடர்ச்சியாக பாடகி கெனிஷா என்பவருடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக ஜெயம் ரவி தனது திருமண வாழ்விலிருந்து விலகியதாக வதந்திகள் பரவின.
இதற்கு பதிலளித்த ஜெயம் ரவி, “யாரையும் என் தனிப்பட்ட வாழ்க்கையில் இழுக்காதீர்கள். என் தனிப்பட்ட வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கையாகவே இருக்கட்டும். கெனிஷா, ஒரு மனநல ஆலோசகர். நானும் அவரும் சேர்ந்து வருங்காலத்தில் மனநல மையம் ஒன்றைத் தொடங்குவதே எங்கள் நோக்கம்” என்று தெரிவித்தார்.
இதன் பிறகு டிடி நெக்ஸ்டுக்கு பேட்டியளித்த கெனிஷா, “ஜெயம் ரவியின் மணமுறிவுக்கு நான் காரணமல்ல. அவர் என் நண்பர். ஆர்த்தியுடனான திருமண உறவால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மீள்வதற்காக என்னிடம் தெரபி எடுத்துக்கொள்ள கடந்த ஜூன் மாதம் என்னைத் தொடர்புகொண்டார் ஜெயம் ரவி” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் என்னைப் பற்றி அவதூறு பரப்புபவர்களுக்கு பதிலளிக்காமல் இருக்க முடிவு செய்துள்ளதாக ஆர்த்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆர்த்தியின் இன்ஸ்டாகிராம் பதிவு
“எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கருத்துகளுக்கு நான் மௌனம் தெரிவிப்பது, என்னுடைய பலவீனமோ, குற்றவுணர்ச்சியோ அல்ல என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.
என்னைப் பற்றி அவதூறு பரப்புபவர்களுக்கும், உண்மையை மறைக்க என் மீது தவறான குற்றசாட்டுகள் வைப்பவர்களுக்கும் பதிலளிக்காமல் இருக்க முடிவு செய்துள்ளேன். சட்டம், நீதியை வழங்கும் என நம்புகிறேன்.
இருவரின் சம்மதத்துடன் ஒரு பொது அறிவிப்பு வெளியிடப்பட்டதை குறிக்கும் வகையிலேயே என்னுடைய முந்தைய அறிக்கை இருந்தது. அந்த அறிவிப்பை கண்டு அதிர்ச்சி அடைந்ததால் தான் அந்த அறிக்கையை வெளியிட்டேனே தவிர, ஒருதலைபட்சமாக நடைபெற்று கொண்டிருக்கும் விவாகரத்து தொடர்பாக அதனை வெளியிடவில்லை. துரதிர்ஷ்டவசமாக எனது வார்த்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது.
இந்த விஷயத்தில் தனிப்பட்ட உரையாடலை இன்று வரை நான் எதிர்பார்த்தும், அது மறுக்கப்படுகிறது. திருமணத்தின் புனித தண்மையை நான் மிகவும் மதிக்கிறேன், எனவே ஒருவரின் நற்பெயரைப் புண்படுத்தும் வகையிலான விவாதங்களில் ஈடுபட மாட்டேன்”.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.