கடந்த 3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ரூ. 9.74 லட்சம் கோடி அளவிலான முதலீடுகளை தமிழக அரசு ஈர்த்துள்ளதாக பேசியுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்
இன்று (ஆகஸ்ட் 21) காலை சென்னை லீலா பேலஸில், தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டைத் தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு பன்னாட்டு, உள்நாட்டு தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொடங்கவுள்ள புதிய தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியவை பின்வருமாறு:
`கடந்த ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினோம். மாநாடுகள் நடத்துவதைவிட அந்த மாநாடுகள் மூலம் எவ்வளவு முதலீடுகள் ஈர்த்தோம் என்பதில்தான் மாநாட்டின் வெற்றி உள்ளது. அந்த மாநாட்டில் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, ரூ. 6.64 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டன.
மொத்தமாக கடந்த 3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ரூ. 9.74 லட்சம் கோடி அளவிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதும் நமது கடமை முடிந்துவிட்டது என இருக்காமல் அந்த தொழில்களை நிறுவுவதற்குத் தேவையான ஆதரவு சேவைகளை அளித்து வருகிறோம்.
இதை கடமையாக நினைக்காமல் தன்னார்வத்தோடு செயல்படுத்திக் காட்டி வருகிறோம். இதன் தொடர்ச்சியாக 19 வகையான திட்டங்களை இன்று நான் தொடங்கி வைத்திருக்கிறேன். ரூ.17,616 கோடி மதிப்பிலான இந்தத் திட்டங்களின் மூலம் 64,968 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
தொழில் வளர்ந்தால் மாநிலமும் வளரும், கிடைக்கும் வேலைவாய்ப்புகளால் குடும்பங்களும் வளரும், வாழும். அமைதியான, சட்டஒழுங்கு சிறப்பாக இருக்கும் மாநிலத்தைத் தேடித்தான் தொழில்துறையினர் வருவார்கள். தமிழ்நாட்டில் நிம்மதியாக தொழில் நிறுவனத்தை நடத்தலாம் என்ற நம்பிக்கை தொழில் துறையினருக்கு வந்துள்ளது.
அதிக முதலீடுகளை ஈர்க்கக்கூடிய உயர் தொழில்நுட்பம் வாய்ந்த தொழில்களையும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய தொழில்களையும் ஈர்த்து, அது மூலம் 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற வேண்டும் என்ற இலக்கை அடைய நம் அரசு முனைப்பாக செயலாற்றி வருகிறது.