உலகம்

தமிழக அரசின் திட்டங்களைப் பிரதிபலித்த இங்கிலாந்து தொழிலாளர் கட்சி தேர்தல் அறிக்கை

இங்கிலாந்து தொடக்க பள்ளிகளில் இலவச கிளப் தொடங்கப்படும் அங்கே பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவு அளிக்கப்படும்...

ராம் அப்பண்ணசாமி

கடந்த ஜூலை 4-ல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் உள்ள 650 இடங்களுக்கு நடந்த தேர்தலில் 411 இடங்களைக் கைப்பற்றியது தொழிலாளர் கட்சி. தேர்தலில் வெற்றி பெற்ற தொழிலாளர் கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் இங்கிலாந்து நாட்டின் பிரதமராகப் பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில் தமிழக அரசு செயல்படுத்தி வரும் மூன்று முக்கியத் திட்டங்களைத் தன் தேர்தல் அறிக்கையில் தொழிலாளர் கட்சி வெளியிட்டுள்ள சுவாரசியத் தகவல் வெளியாகியுள்ளது.

2022 முதல் தமிழக அரசால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதல்வரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதைப் போல, இங்கிலாந்தில் உள்ள ஒவ்வொரு தொடக்கப் பள்ளியிலும் இலவச கிளப் தொடங்கப்படும் அங்கே பள்ளிக் குழந்தைகள் காலை உணவு அருந்தலாம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது தொழிலாளர் கட்சி.

இரண்டாவதாக, இங்கிலாந்து இளைஞர்கள் சிறந்த பயிற்சி மற்றும் வேலைகளைப் பெற புதிய கல்லூரிகள் அமைக்கப்படும் என்று தொழிலாளர் கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. இதைப் போல தமிழக இளைஞர்களுக்கு பல்வேறு வேலைவாய்ப்பு பயிற்சிகளை வழங்க `நான் முதல்வன் திட்டத்தை’ தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

2024 பிப்ரவரியில் குடிசை வீடுகளுக்கு மாற்றாக தமிழக அரசு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை அறிவித்தது. இதைப் போல, மலிவு விலையில் 15 லட்சம் புதிய வீடுகள் வாடகைக்கு எடுக்கப்பட்டு அல்லது கட்டித் தரப்படும் என்று தொழிலாளர் கட்சி தன் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது.