காஸா - கோப்புப்படம் ANI
உலகம்

காஸா நிலப்பரப்பை ஹமாஸிடம் இருந்து விடுவிப்பதே இலக்கு: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு | Gaza Strip | Israel

இஸ்ரேலின் இந்த நடவடிக்கை படிப்படியாக இருக்கும், இதற்கான தொடக்க தேதி என எதுவும் இல்லை.

ராம் அப்பண்ணசாமி

காஸா மீதான இஸ்ரேலின் வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல் இரண்டு வருடங்களை நிறைவு செய்யவுள்ள நிலையில், இதுவரை அங்கே பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தொடர் தாக்குதலால் அப்பகுதியில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர், மேலும் காஸா பகுதி வரலாறு காணாத பஞ்சத்தை சந்தித்துள்ளது.

இந்நிலையில், நேற்று (ஆக. 8) நடைபெற்ற இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை முழுமையாக ஆக்கிரமிக்கும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக செய்தி வெளியானது.

இஸ்ரேலின் இந்த முடிவுக்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு வெளியான நிலையில், பிரதமர் நெதன்யாகுவின் அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் வெளியிட்ட பதிவில், `நாங்கள் காசாவை ஆக்கிரமிக்கப்போவதில்லை, ஹமாஸிடமிருந்து காசாவை விடுவிக்கப்போகிறோம்’ என்று விளக்கமளிக்கப்பட்டது.

அதேநேரம் இஸ்ரேலின் இந்த நடவடிக்கை படிப்படியாக இருக்கும் என்றும் இதற்கான தொடக்க தேதி என எதுவும் இல்லை என்றும், காஸாவை கைப்பற்றும் திட்டங்களை நன்கு அறிந்த ஒரு இஸ்ரேலிய அதிகாரி கூறியதாக ஏ.எஃப்.பி. ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை காஸாவை கைப்பற்றும் திட்டத்தை அங்கீகரிப்பதற்கு முன்பு, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில் முழு காஸாவையும் இஸ்ரேல் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.

மத்திய தரைகடலை ஒட்டி அமைந்துள்ள காஸாவின் முக்கால்வாசிப் பகுதி தற்போது இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இஸ்ரேலின் இந்த திட்டத்தை நிராகரித்துள்ள ஹமாஸ், `நமது பாலஸ்தீன மக்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பை விரிவுபடுத்துவது சாதாரண செயலாக இருக்காது’ என்று அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளது.

இந்நிலையில், காஸா தொடர்புடைய இஸ்ரேலின் திட்டங்கள் குறித்த ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அவசர ஆலோசனைக் கூட்டம் அமெரிக்க நேரப்படி இன்று (ஆக. 9) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், நாளை (ஆக. 10) காலை 10 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காஸாவில் நிலவி வரும் பஞ்சம் குறித்த செய்தி அறிக்கைகளால் அதிகரித்து வரும் அதிர்ச்சிக்கு மத்தியில், இஸ்ரேலின் நட்பு நாடுகளான பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் கனடா உள்ளிட்டவை இஸ்ரேல் மேற்கொண்டு வரும் போர் மீதான விமர்சனத்தை அதிகரித்துள்ளன.

குறிப்பாக, மறு அறிவிப்பு வரும் வரை காஸாவில் பயன்படுத்தக்கூடிய ராணுவ உபகரணங்களை ஏற்றுமதி செய்வதற்கு அங்கீகாரம் வழங்கப்படமாட்டாது என்று ஜெர்மனி நேற்று (ஆக. 8) அறிவித்துள்ளது.