REUTERS
உலகம்

அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயங்கமாட்டோம்: கிம் ஜோங் உன் எச்சரிக்கை

எதிரிகள் எங்களை தாக்க முற்பட்டால் தயக்கமின்றி அவர்களுக்கு எதிராக அனைத்துவித தாக்குதல்களையும் நடத்துவோம். அதில் அணு ஆயுதங்களின் பயன்பாட்டையும் தவிர்க்க முடியாது.

ராம் அப்பண்ணசாமி

அணு ஆயுதங்களுடன் கூடிய ராணுவ சக்தியாக உருவெடுக்கும் முயற்சிகள் துரிதப்படுத்தப்படும் எனவும், எதிரி நாடு தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயங்கமாட்டோம் எனவும் பேசியுள்ளார் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்.

நேற்று (அக்.07) வட கொரிய தலைநகர் பியோங்யங்கில் உள்ள தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்கு சென்ற அதிபர் கிம் ஜோங் உன், அங்கு பயிற்சி பெற்றுவரும் ராணுவ அதிகாரிகளிடம் உரையாற்றினார். கிம் ஜோங் உன் பேசியவை பின்வருமாறு:

`யூன் சக் யோல் (தென் கொரிய அதிபர்) வட கொரியாவின் முடிவு குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசி வருகிறார். அவர் தனது எஜமானரின் (அமெரிக்கா) மீது கொண்டுள்ள குருட்டு நம்பிக்கையை இது காட்டுகிறது. நேர்மையாகச் சொல்வதென்றால், தென் கொரியாவைத் தாக்கும் எண்ணம் எங்களுக்கு முற்றிலுமாக இல்லை.

ஒவ்வொரு முறையும் ராணுவத்தைப் பயன்படுத்துவது குறித்த எங்களின் நிலைபாட்டை தெளிவாகக் கூறியிருக்கிறேன். எதிரிகள் எங்களைத் தாக்க முற்பட்டால் தயக்கமின்றி அவர்களுக்கு எதிராக அனைத்துவித தாக்குதல்களையும் நடத்துவோம். அதில், அணு ஆயுதங்களின் பயன்பாட்டையும் தவிர்க்க முடியாது. அணு ஆயுதங்களுடன் கூடிய ராணுவ சக்தியாக உருவெடுக்கும் முயற்சிகள் துரிதப்படுத்தப்படும்’ என்றார்.

கடந்த வாரம் கொண்டாடப்பட்ட தென் கொரியாவின் தேசிய ராணுவப் படைகள் தின விழாவில் பேசிய அந்நாட்டு அதிபர் யூன் சக் யோல், `வட கொரிய அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால், அன்றே வட கொரியாவின் ஆட்சி முடிவுக்கு வரும்’ என்றார்.