REUTERS
உலகம்

ஈரான் ஒருபோதும் சரணடையாது: உச்ச தலைவர் காமேனி

"எந்தவொரு அமெரிக்க ராணுவத் தலையீடு ஏற்பட்டாலும், சந்தேகமே இல்லாமல் சரிசெய்ய முடியாத சேதத்தை எதிர்கொள்ள நேரிடும்."

கிழக்கு நியூஸ்

ஈரான் ஒருபோதும் கட்டாயத்தின் பெயரில் சரணடையாது என அந்நாட்டு உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல், ஈரான் இடையிலான வான்வழித் தாக்குதல் தொடர்ந்து 5 நாள்களாக நடைபெற்று வருகிறது. ஈரான் வசம் அணு ஆயுதம் இருக்கக் கூடாது என்பதில் இஸ்ரேல் குறியாக இருக்கிறது. இதனால், அணு ஆயுதங்கள் தொடர்புடைய இடங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனிடையே, கனடா ஜி7 உச்சி மாநாட்டிலிருந்து அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு நாள் முன்னதாகவே புறப்பட்டு, அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யை சென்றடைந்தார். இதைத் தொடர்ந்து, ஈரானின் வான்வழி முழுவதும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக டிரம்ப் பதிவிட்டார். மேலும், ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி பதுங்கியிருக்கும் இடம் தெரியும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

"ஈரானின் உச்ச தலைவர் எங்கு பதுங்கியிருக்கிறார் என்பது எங்களுக்குத் துல்லியமாகத் தெரியும். அவரைக் குறிவைப்பது மிக எளிது. ஆனால், அவர் அங்கு பாதுகாப்பாக இருக்கிறார். அவரைக் கொல்லப்போவதில்லை. குறைந்தபட்சம் தற்போதைக்கு கொல்லப்போவதில்லை. அப்பாவி மக்கள் அல்லது அமெரிக்க ராணுவ வீரர்கள் மீது ஏவுகணைகள் விழுவதை நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் பொறுமையை இழந்து வருகிறோம்" என்று டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக வெறுமன, "நிபந்தனையின்றி சரண்" என்று மட்டும் ஒரு பதிவை பதிவிட்டிருந்தார் டிரம்ப்.

இந்நிலையில், ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது ஈரான் ஒருபோதும் கட்டாயத்தின் பெயரில் சரணடையாது என காமேனி பேசினார்.

"திணிக்கப்பட்ட போராக இருந்தாலும் சரி, திணிக்கப்பட்ட அமைதியாக இருந்தாலும் சரி அதற்கு எதிராக ஈரான் உறுதியாக நிற்கும். கட்டாயத்தின் பெயரில் யாரிடமும் ஈரான் சரணடையாது. இஸ்ரேல் பெரும் தவறைச் செய்துள்ளது. இதற்காக அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

ஈரான் ஒருபோதும் சரணடையாது என்பதை அமெரிக்கா தெரிந்துகொள்ள வேண்டும். எந்தவொரு ராணுவத் தலையீடு ஏற்பட்டாலும், சந்தேகமே இல்லாமல் சரி செய்ய முடியாத சேதத்தை அவர்கள் எதிர்கொள்ள நேரிடும்" என்று அமெரிக்காவுக்கு எச்சரிக்கையும் விடுத்தார் காமேனி.

முன்னதாக, ஈரான் உச்ச தலைவரைக் கொல்ல இஸ்ரேல் திட்டமிட்டதாகவும் டிரம்ப் இதைத் தடுத்து நிறுத்தியதாகவும் தகவல் வெளியானது.