உலகம்

டிரம்பை சுட்டவரைப் பற்றி முன்பே கூறினோம்: நேரில் பார்த்தவர் சொல்லும் திக் திக் நிமிடங்கள்!

கிழக்கு நியூஸ்

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை முன்கூட்டியே அடையாளம் காட்டியது தொடர்பாக, சம்பவத்தை நேரில் பார்த்தவர் பிபிசி செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், பென்னிசில்வேனியாவில் தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் தேர்தல் பரப்புரை நிகழ்த்தினார். அப்போது திடீரென டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் டிரம்பின் காதுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பாதுகாவலர்களின் உதவியுடன் அப்பகுதியிலிருந்து வெளியேறினார் டிரம்ப். அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர், துப்பாக்கிச் சூட்டில் பலியானார். இதன்பிறகு, துப்பாக்கியால் சுட்ட நபரைச் சுட்டுக் கொன்றது சிறப்புப் பாதுகாப்புப் படை.

இதுதொடர்பாக, அமெரிக்க ஊடகங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில், டிரம்பை சுட்டவர் பென்சில்வேனியாவின் பெத்தெல் பார்க்கைச் சேர்ந்த 20 வயது தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். டிரம்ப் மேற்கொண்டு வந்த பரப்புரை மேடையிலிருந்து 119 மீட்டர் தொலைவிலிருந்து அந்த இளைஞர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறார்.

துப்பாக்கிச் சூடு நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, சம்பவ இடத்திலிருந்த நபர் ஒருவர் துப்பாக்கி வைத்திருந்த நபர் குறித்து போலீஸிடம் தகவல் தெரிவித்திருக்கிறார். போலீஸார் இதைக் கண்டுகொள்ளவில்லை என்று அவர் பேட்டியளித்துள்ளார்.

பிபிசி-க்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், "50 அடி தூரத்தில் கட்டடத்தின் மீது ஒரு நபர் இருப்பதை நாங்கள் பார்த்தோம். அவர் கையில் ரைஃபிள் இருந்தது அப்பட்டமாகத் தெரிந்தது. போலீஸாரிடம் அவரைக் காண்பித்தோம். போலீஸார் அங்கும் இங்கும் ஓடினார்கள். அங்கு ஒருவன் கையில் துப்பாக்கியுடன் நிற்கிறான் என்ற எண்ணத்தில் நாங்கள் இருக்கிறோம். ஆனால், போலீஸாருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. 2, 3 நிமிடங்கள் இருந்தது. போலீஸாரிடம் எச்சரித்தோம். ஆனால், அவர்களால் அவரைக் காண முடியவில்லை என்று நினைக்கிறேன்.

டிரம்ப் ஏன் இன்னும் பேசிக்கொண்டிருக்கிறார், அவரை மேடையிலிருந்து கீழே இறக்கியிருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. இதன்பிறகு, துப்பாக்கிச் சூடு நடைபெற்றது" என்றார்.