ANI
உலகம்

"கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்": எலான் மஸ்கை எச்சரித்த டிரம்ப்!

"எலான் மஸ்க் உடனான உறவைச் சரி செய்ய விரும்பவில்லை. அவரிடம் பேசுவதற்கான எண்ணமே இல்லை."

கிழக்கு நியூஸ்

வரி குறைப்பு மசோதாவுக்கு எதிராக ஜனநாயகக் கட்சியினருக்கு நிதியுதவி செய்தால் எலான் மஸ்க் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்புக்கு பெரும் ஆதரவாக இருந்தவர் தொழிலதிபரான டெஸ்லாவின் தலைமைச் செயல் அலுவலர் எலான் மஸ்க். டிரம்ப் அதிபரான பிறகு, அரசு செயல்திறன் துறையின் தலைவராக எலான் மஸ்க் 130 நாள்களுக்கு நியமிக்கப்பட்டார். இப்பொறுப்பிலிருந்து விலகுவதாக எலான் மஸ்க் கடந்த மே 29 அன்று அறிவித்தார்.

இப்பொறுப்பிலிருந்து இவர் விலகிய பிறகு அதிபர் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே கருத்து மோதல் வெடித்தது. டிரம்ப் அரசு கொண்டுவந்துள்ள வரிவிதிப்பு மசோதாவுக்கு எதிராக எலான் மஸ்க் போர்க்கொடி தூக்கி வருகிறார். வெளிப்படையாகவே எக்ஸ் தளப் பக்கத்தில் இந்த மசோதா தொடர்பாக டிரம்புக்கு எதிரான பதிவுகளைப் பதிவிட்டு வந்தார் எலான் மஸ்க்.

அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை என்பிசி செய்திகளுக்குப் பேட்டியளித்தார். இதில் எலான் மஸ்க் உடனான உறவைச் சரி செய்ய விரும்பவில்லை என டிரம்ப் வெளிப்படையாகத் தெரிவித்தார். அவரிடம் பேசுவதற்கான எண்ணமே இல்லை என்பதையும் டிரம்ப் தெரிவித்தார்.

மேலும், "மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் குடியரசு கட்சியினருக்கு எதிராக ஜனநாயகக் கட்சியினருக்கு நிதியுதவி செய்தால் எலான் மஸ்க் செயல்பட்டால், அதற்கான கடுமையான விளைவுகளை அவர் எதிர்கொள்ள நேரிடும்" என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

முன்னதாக, எலான் மஸ்க் பற்றி ஏபிசி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த டிரம்ப், "புத்தியை இழந்தவரைப் பற்றியா கேட்கிறீர்கள்? அவரிடம் பேச தற்போது விருப்பம் இல்லை. எலான் மஸ்க் என்னிடம் பேச விரும்புகிறார். அவரிடம் பேச நான் தயாராக இல்லை" என்றார்.