உலகம்

டொனால்ட் டிரம்பின் ஏ.ஐ. ஆலோசகரான தமிழர்: யார் இந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்?

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பிறகு, அதன் மறுகட்டமைப்பில் முக்கியப் பங்காற்றினார் ஸ்ரீராம்.

ராம் அப்பண்ணசாமி

அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்பின் (ஏ.ஐ.) செயற்கை நுண்ணறிவு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் தமிழரான ஸ்ரீராம் கிருஷ்ணன்.

அமெரிக்க அதிபர் அலுவலகமான வெள்ளை மாளிகையில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அலுவலகத்தின் செயற்கை நுண்ணறிவு ஆலோசகர் பதவிக்கு தமிழரான ஸ்ரீராம் கிருஷ்ணனை நியமிப்பதாக அறிவித்துள்ளார் டொனால்ட் டிரம்ப். இந்தப் பணியில் டேவிட் சேக்ஸுடன் இணைந்து பணியாற்றுவார் ஸ்ரீராம் எனவும் அறிவித்துள்ளார் டிரம்ப்.

சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன் பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் இளங்கலை தகவல் தொழில்நுட்பவியல் பட்டப்படிப்பை முடித்தார். இதைத் தொடர்ந்து மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் ப்ரோக்ராம் மேனேஜராகப் பணியாற்றினார் ஸ்ரீராம்.

இதனை அடுத்து பேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றி, அதன் கைப்பேசி விளம்பர தளத்தின் விரிவாக்கத்தில் முக்கியப் பங்குவகித்தார் ஸ்ரீராம் கிருஷ்ணன். அதன்பிறகு ஸ்னாப் நிறுவனத்திலும், பின்னர் ட்விட்டர் நிறுவனத்திலும் பணியாற்றினார் ஸ்ரீராம். குறிப்பாக, ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பிறகு அதன் மறுகட்டமைப்பில் அவர் முக்கியப் பங்காற்றினார்.

தற்போது அண்ட்ரீசென் ஹோரோவிட்ஸ் வென்சர் கேப்பிடல் நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளார் ஸ்ரீராம் கிருஷ்ணன். அவரது மனைவி ஆர்த்தி ராமமூர்த்தியுடன் இணைந்து ஆர்த்தி ஸ்ரீராம் ஷோ என்ற பெயரில் பாட்காஸ்ட் ஒன்றையும் நடத்திவருகிறார்.