அமெரிக்காவில் பறவைக் காய்ச்சல் அதிகரிப்பால் முட்டை விலைகள் உயர்ந்துள்ளதை தொடர்ந்து, கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் இருந்து போதைப் பொருட்களைவிட அதிகமாக கடத்தப்படும் பொருளாகியுள்ளது முட்டை.
மருத்துவ சிகிச்சைக்காக உபயோகப்படுத்தப்படும் ஃபெண்டானில் என்கிற வஸ்து, போதைப் பொருளாகவும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படுகிறது. போதைப் பொருட்களை அளவுக்கதிகமாக உட்கொண்டு அமெரிக்காவில் ஏற்படும் மரணங்களுக்கு முதன்மை காரணமாக உள்ளது ஃபெண்டானில்.
கனடாவுடனான எல்லைப்பகுதி வழியாக தங்கள் நாட்டிற்குள் ஃபெண்டானில் அதிகளவில் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டை முன்வைத்தது அமெரிக்க அரசு. இந்த விவகாரத்தை முன்வைத்து இரு நாடுகளுக்கும் இடையே சுங்க வரி உயர்வு தொடர்பான பிரச்னையும் நடந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில், பறவைக் காய்ச்சல் அதிகரித்துள்ள காரணத்தால் அமெரிக்காவில் முட்டை விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதை ஒட்டி, கடந்தாண்டு அக்டோபர் 2024-ல் இருந்து கனடாவுடனான எல்லைப் பகுதி வழியாக அமெரிக்காவிற்குள் முட்டைகள் கடத்தி வரப்படும் சம்பவம் சுமார் 36 சதவீதம் உயர்ந்துள்ளதாக அமெரிக்க சுங்கத்துறை அதிகாரிகள் அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டுள்ளார்கள்.
அதேநேரம், இந்த முட்டை கடத்தல் சம்பவங்கள் மெக்ஸிகோவுடனான அமெரிக்க எல்லைப் பகுதியில் சுமார் 158 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.
அதிலும் குறிப்பாக, அமெரிக்காவின் அனைத்து எல்லைகளிலும் அக்டோபர் 2024 முதல் சட்டவிரோதமாக கடத்தப்பட முயற்சிசெய்யப்பட்ட முட்டை உள்ளிட்ட கோழி தொடர்பாக பொருட்கள் 3,768 முறை கைப்பற்றப்பட்டுள்ளன. ஆனால் 352 முறை மட்டுமே ஃபெண்டானில் கைப்பற்றப்பட்டுள்ளது.