ரஷ்யா மீது ஏவுகணைகளைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு அமெரிக்க அனுமதி அளித்துள்ளதை அடுத்து, புதிய அணு ஆயுதக் கொள்கைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளார் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்.
நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை வழங்கியிருந்தாலும், அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள உக்ரைனுக்கு இதுவரை அமெரிக்க அரசு அனுமதி அளிக்கவில்லை. ஆனால் அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அந்த ஏவுகணைகளைப் பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
அமெரிக்க ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தும் பட்சத்தில் அதனால் மிகப்பெரிய விளைவுகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரஷ்ய அரசின் செய்தித்தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் `இந்த செயல் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போன்றது. இதனால் இந்தப் பிரச்னையில் அமெரிக்கா நேரடியாகப் பங்கேற்கிறது என்றே அர்த்தம்’ என்றார்.
ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு உக்ரைனுக்கு அளித்துள்ள இந்த அனுமதி தொடர்பாக, புதிய அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்ட் டிரம்ப் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவரது மகன் ஜூனியர் டிரம்ப், `எனது தந்தை அமைதியை ஏற்படுத்துவதற்கு முன்பு 3-ம் உலகப் போர் நடைபெறுவதற்கான முயற்சி நடக்கிறது’ என்றார்.
உக்ரைன் எல்லையை ஒட்டியுள்ள ரஷ்யாவின் குர்ஸ்க் நகரத்தை கடந்த ஆகஸ்டில் உக்ரைன் கைப்பற்றியதை அடுத்து, தற்போது அங்கே வட கொரிய ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதை ஒட்டியே ஏவுகணைகளை பயன்படுத்திக்கொள்ள தற்போது உக்ரைனுக்கு அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில், அமெரிக்கா உக்ரைனுக்கு அனுமதி வழங்கியதை முன்வைத்து, புதிய அணு ஆயுத கொள்கைக்கு ரஷ்யா அதிபர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி, அணு ஆயுத நாடு ஒன்றின் உதவியுடன் ரஷ்யா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டால், பதிலுக்கு அணு ஆயுதங்கள் பயன்படுத்துவது குறித்து ரஷ்யா பரிசீலிக்கும்.