கோப்புப்படம் 
உலகம்

இந்தியா, பாக். சண்டையில் 5 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன: டிரம்ப் | Donald Trump

"இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான சண்டையை வர்த்தகம் மூலம், தான் நிறுத்தியதாக 24-வது முறையாக டிரம்ப் தெரிவித்துள்ளார்."

கிழக்கு நியூஸ்

இந்தியா, பாகிஸ்தான் இடையிலான சண்டையில் 5 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் குடியரசுக் கட்சியின் செனடர்களுக்கு அதிபர் டிரம்ப் இரவு உணவு விருந்தளித்தார்.

அப்போது பேசிய அவர், "இந்தியா, பாகிஸ்தான் இடையே சண்டை நடைபெற்றது. விமானங்கள் கூட சுட்டு வீழ்த்தப்பட்டன. 5 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என நினைக்கிறேன். நிலைமை மோசமாகிக் கொண்டே இருந்தது. இரு நாடுகளும் மாறிமாறி தாக்கிக்கொண்டன. இரு நாடுகளும் அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளன.

நிலைமை பெரிதாகிக் கொண்டே இருந்தது. வர்த்தகம் மூலம் நாம் இதைத் தீர்த்து வைத்தோம். இரு நாடுகளும் ஆயுதங்களைக் கொண்டு தாக்கிக்கொண்டிருந்தால், வர்த்தகம் செய்ய முடியாது என்றோம். இரு நாடுகளும் மிக வலிமையான அணு ஆயுதங்களைக் கொண்டுள்ள நாடுகள்.

நாம் பல போர்களை நிறுத்தியுள்ளதை எண்ணி நான் பெருமை கொள்வேன். இதுவும் இவை மிகத் தீவிரமான போர்கள்" என்றார் டிரம்ப்.

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக டிரம்ப் கூறினாலும், எந்த நாட்டினுடைய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்பதை அவர் தெளிவுபடுத்தவில்லை.

"இந்தியா, பாகிஸ்தான் இடையிலான சண்டையில் 5 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இத்துடன் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான சண்டையை வர்த்தகம் மூலம், தான் நிறுத்தியதாக 24-வது முறையாக டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்ப் திரும்பத் திரும்ப இதைக் கூறி வருகிறார். நரேந்திர மோடி அமைதி காக்கிறார்" என்று காங்கிரஸ் தரப்பில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி தரும் விதமாக கடந்த மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டு ஜம்மு-காஷ்மீரிலுள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.

இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், இரு நாடுகளுக்கு இடையே மே 10 வரை மிகப் பதற்றமான சூழல் காணப்பட்டது.

மே 10 அன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டார்.

பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் இந்தியாவைத் தொடர்புகொண்டு கேட்டுக்கொண்டதற்கு இணங்க சண்டை நிறுத்தப்பட்டது என்பது இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு.

வர்த்தகம் மூலம் இரு நாடுகளுக்கிடையே சண்டையை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ச்சியாகக் கூறி வருவது இந்தியாவில் பெரும் விவாதமாகவே இருந்து வருகிறது.

ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதன்முறையாக கடந்த மாதம் உரையாடினார்கள்.

இந்த உரையாடலின்போது, இந்தியா பாகிஸ்தான் இடையிலான சண்டையில் பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்வது பற்றியோ அல்லது அமெரிக்கா - இந்தியா இடையிலான வர்த்தகம் பற்றியோ எந்தவொரு சூழலிலும் விவாதிக்கப்படவில்லை என்று டிரம்பிடம் பிரதமர் மோடி தெளிவுபடுத்தியதாக மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி கூறினார்.

India Pakistan | Ind Pak | Donald Trump | US President | PM Modi | Congress