உலகம்

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல்: ஆட்சியமைக்குமா தொழிலாளர் கட்சி?

பார்ட்டிகேட் ஊழல், லிஸ் டிரஸ்ஸின் குறுகிய கால ஆட்சி, பெருந்திரள் ராஜினாமா, பின்சர் ஊழல் என்று கன்சர்வேடிவ் கட்சியின் ஆட்சியில் பல பிரச்சனைகள் நிலவின

ராம் அப்பண்ணசாமி

ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் பிரிட்டன் நாடாளுமன்றத்தின் கீழ் அவைக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

கன்சர்வேடிவ் கட்சியின் பிரதமர் முகமாக உள்ள தற்போதைய பிரதமர் ரிஷி சுனக் களத்தில் உள்ளார். சுனக்கை எதிர்த்து தொழிலாளர் கட்சி சார்பில் அதன் தலைவர் கியெர் ஸ்டார்மர் பிரதமர் வேட்பாளராகப் போட்டியில் உள்ளார்.

கன்சர்வேடிவ் கட்சி கடந்த 14 வருடங்களாகத் தொடர்ந்து பிரிட்டனில் ஆட்சியில் உள்ளது. 2019-ல் நடந்த தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது கன்சர்வேடிவ் கட்சி. அப்போது அதன் தலைவர் போரிஸ் ஜான்சன் பிரதமராகப் பதவியேற்றார். 2022-ல் ஜான்சன் ராஜினாமா செய்த பிறகு லிஸ் டிரஸ் 50 நாட்கள் பிரதமராக இருந்தார். அதன் பிறகு அக்டோபர் 2022 முதல் ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராக உள்ளார்.

பார்ட்டிகேட் ஊழல், லிஸ் டிரஸ்ஸின் குறுகிய கால ஆட்சி, பெருந்திரள் ராஜினாமா, பின்சர் ஊழல் என கன்சர்வேடிவ் கட்சியின் ஆட்சியில் பல பிரச்சனைகள் நிலவின. இந்தக் காரணங்களால் பிரிட்டன் மக்கள் மத்தியில் கன்சர்வேடிவ் ஆட்சிக்கு எதிரான மனநிலை அதிகரித்தது.

இதனால் தேர்தலுக்கு முன்பு வெளியான பல்வேறு கருத்து கணிப்புகளில் தொழிலாளர் கட்சி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் ஆட்சி அமைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தேர்தலில் பிரட்டன் வாழ் தமிழர்கள் 8 பேர் போட்டியிடுகின்றனர். நாளை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.