அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ - கோப்புப்படம் 
உலகம்

விசா என்பது உரிமை அல்ல, சலுகை: அமெரிக்க வெளியுறவுத்துறை எச்சரிக்கை! | USA | Visa

அமெரிக்க விசா வைத்திருப்பவர்கள் அனைத்து அமெரிக்க சட்டங்களையும் பின்பற்றவேண்டும்.

ராம் அப்பண்ணசாமி

அமெரிக்க விசா உத்தரவாதமான உரிமை அல்ல, மாறாக அது ஒரு சலுகை – அமெரிக்க விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்க சட்டங்களை மீறினால் அது ரத்து செய்யப்படும் என்று உறுதியான தொனியில் அறிக்கை வெளியிட்டு அமெரிக்க வெளியுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

`அமெரிக்காவில் இருக்கும்போது தாக்குதல், வன்முறை அல்லது பிற கடுமையான குற்றங்களுக்காக கைது செய்யப்படும் நபர்களின் விசாக்கள் உடனடியாக ரத்து செய்யப்படலாம். மேலும், அத்தகைய நபர்களை எதிர்காலத்தில் அமெரிக்க விசாக்களுக்கு தகுதியற்றவர்களாக மாற்றவும் வாய்ப்புள்ளது’ என்று நேற்று (ஜூலை 15) வெளியான அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

`ஒரு தவறான நடவடிக்கையால் உங்களது தங்கும் உரிமையை இழக்க நேரிடும் – அனைவரும் அமெரிக்க சட்டங்களை மதிக்கவேண்டும் அல்லது விசா ரீதியிலான நிரந்தர விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என்றும் வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

முன்னதாக, கடந்த ஜூலை 12 அன்று இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகமும் இத்தகைய எச்சரிக்கையை வெளியிட்டது. அமெரிக்க விசா வைத்திருப்பவர்கள் அனைத்து அமெரிக்க சட்டங்களையும் பின்பற்றவேண்டும் என்று தூதரகம் கேட்டுக்கொண்டது.

`விசா வழங்கப்பட்ட பிறகு அது தொடர்பான சோதனைகள் முடிவுக்கு வருவதில்லை. அனைத்து அமெரிக்க சட்டங்கள் மற்றும் குடியேற்ற விதிகளை பின்பற்றுவதை உறுதிசெய்ய விசா வைத்திருப்பவர்களை நாங்கள் தொடர்ந்து சரிபார்க்கிறோம் - அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால் அவர்களின் விசாக்களை ரத்து செய்து நாடு கடத்துவோம்’ என்று எக்ஸ் பதிவில் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட கடுமையான குடியேற்ற அமலாக்கக் கொள்கைகளின் தொடர்ச்சியை, இத்தகைய நடவடிக்கைகள் எடுத்துக்காட்டுவதாக கூறப்படுகிறது.