உலகம்

ஐஎஸ்ஐஎஸ் நிறுவனர் ஒபாமா: டிரம்பின் போலி விடியோவால் பரபரப்பு

2016 அதிபர் தேர்தலின்போது குடியரசுக் கட்சி வேட்பாளரான டிரம்ப் விவாதத்தின்போது கூறிய கருத்துக்கள் சிலவற்றின் கோர்வை என்பது தெரியவந்துள்ளது.

ஜெ. ராகவன்

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் நிறுவனர் என டொனால்டு டிரம்ப் கூறியதாக வெளியான விடியோ போலியானது எனத் தெரியவந்துள்ளது.

சமீபத்தில் மாஸ்கோவில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், பராக் ஒபாமாவை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் நிறுவனர் என்று கூறிய விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விடியோவில் மாஸ்கோ மரணங்களுக்கு ஒபாமாவே காரணம் என்று டிரம்ப் கூறும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன. ஆனால், அந்த விடியோ உண்மையானது அல்ல போலியானது என்பது பின்னர் தெரியவந்துள்ளது.

மாஸ்கோ தாக்குதலுக்குப் பின் டிரம்ப் அதுபோன்ற கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. 2016 அதிபர் தேர்தலின்போது குடியரசுக் கட்சி வேட்பாளரான டிரம்ப் விவாதத்தின்போது கூறிய கருத்துக்கள் சிலவற்றின் கோர்வை என்பது தெரியவந்துள்ளது.

வெளியுறவுக் கொள்கை, முரண்பாடான இடங்களில் அமெரிக்க துருப்புகள் நிறுத்தப்பட்டது, துப்பாக்கி உரிமம் குறித்து ஜனநாயக கட்சியுடனருடன் நடந்த விவாதத்தின்போது டிரம்ப் தெரிவித்த கருத்துக்கள் அவை என்பதும் தெரியவந்துள்ளது. ப்ளோரிடாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது டிரம்ப், பராக் ஒபாமாவை கடுமையாக விமர்சித்திருந்தார்.

கடந்த சனிக்கிழமை மாஸ்கோ புறநகர் பகுதியில் உள்ள கலை அரங்கத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 143 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்துக்கு இடமான நான்கு பேர் உள்பட 11 பேரை ரஷிய போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதற்கான ஆதாரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.