வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சோடாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட நிலையில், நார்வேவில் உள்ள தூதரகத்தை மூடுவதாக வெனிசுலா அரசு அறிவித்துள்ளது.
2025 ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சோடாவுக்குக் கடந்த அக்டோபர் 10 அன்று அறிவிக்கப்பட்டது. வெனிசுலா மக்களுக்கான ஜனநாயக உரிமைகளை மேம்படுத்தியதற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதாக நார்வே நாட்டின் தலைநகர் ஆஸ்லோவில் பரிசை அறிவித்த நோபல் கமிட்டி தெரிவித்தது.
வெனிசுலாவின் அரசியலைப் பொறுத்தளவில் அந்நாட்டு அதிபரான நிக்கோலஸ் மதுரோவின் ஆட்சி அடக்குமுறை மிக்கதாகக் கருதப்படுகிறது. ஊடகங்களைக் கட்டுப்படுத்துதல், எதிர்க்கட்சித் தலைவர்களைக் கைது செய்வது போன்ற நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவரது ஆட்சிக் காலத்தில் வெனிசுலாவில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. தொடர்ந்து அமெர்க்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் வெனிசுலா மீது பொருளாதார தடை விதித்துள்ளன.
இதையடுத்து வெனிசுலாவின் ஊழல் அரசுக்கு எதிராக சுமேட் என்ற அமைப்பை உருவாக்கி ஜனநாயகம் மற்றும் வெளிபடைத்தன்மையை வலியுறுத்தி அமைதி வழியில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார் சமூக போராளியான மரியா கொரினா மச்சோடா. அதன்பின் 2010-ல் தேர்தலில் வெற்றிபெற்று 2014 வரை நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றார். தொடர்ந்து 2024 தேர்தலில் அவர் பங்கேற்றபோது, தேர்தலில் போட்டியிட மரியா கொரினா மச்சோடாவுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறப்படும் நிலையில், அவர் தலைமறைவாக இருக்கிறார்.
இந்நிலையில்தான் அவருக்கு ஜனநாயகத்துக்கு ஆதரவான போராட்டத்தை அமைதி வழியில் முன்னெடுத்ததற்காக அமைதிக்கான நோபல் பரிசு நார்வே நாட்டில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, நார்வே நாட்டில் உள்ள தங்கள் நாட்டின் தூதரகத்தை மூடுவதாக வெனிசுலா அறிவித்துள்ளது. இதுகுறித்த அறிக்கையில் தங்களது வெளியுறவு சேவைகளை மறுசீரமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால் ஜிம்பாப்வேவேவில் புதிய தூதரகம் திறக்கப்படுவதாகவும் ஆஸ்திரேலியாவிலும் நார்வேவிலும் தூதரகங்கள் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.