அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் பதினேழு வயதான டைலான் பட்லர் என்ற மாணவர் படித்துவந்தார். மிகவும் அமைதியான அந்த மாணவரைப் பிற மாணவர்கள் தொடர்ந்து கேலி, கிண்டல் செய்து வந்திருக்கின்றனர். சமீபத்தில் அந்த மாணவரின் தங்கையும் அதே பள்ளிக்கூடத்தில் சேர, அவருக்கும் பிற மாணவர்கள் தொல்லை கொடுத்திருக்கின்றனர்.
இதனால் தாள மாட்டாத பட்லர் குளிர்கால விடுமுறைக்குப்பின் பள்ளி தொடங்கிய முதல் நாளிலேயே இரண்டு துப்பாக்கிகள், ஒரு வெடிகுண்டு ஆகியவற்றுடன் பள்ளி வந்து சரமாரியாக பிற மாணவர்கள்மீது தாக்குதல் நிகழ்த்தினார்.
இதில் ஒரு மாணவர் கொல்லப்பட்டார், மேலும் ஐந்து பேர் காயம் அடைந்துள்ளனர். பட்லரும் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்துபோயிருக்கிறார்.
2023-ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் 37 பள்ளிகளில் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது. இதில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவற்றுள் 14 பேர் மாணவர்கள், 6 பேர் ஆசிரியர்கள் அல்லது பிற அலுவலர்கள். 42 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 2024-ஆம் ஆண்டு தொடங்கியபின் நிகழ்ந்த முதல் பள்ளிக்கூடத் துப்பாக்கிச் சூடு இதுவே.
அமெரிக்காவில் பல மாகாணங்களில் அதிகக் கட்டுப்பாடுகள் இன்றி துப்பாக்கிகளை வாங்கமுடியும். பலர் தங்கள் வீடுகளில் துப்பாக்கிகளை வைத்திருக்கின்றனர்.