உலகம்

ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தை மூட முடிவு: நிறுவனர்

அதானி குழுமம், செபி தலைவருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை வைத்த நிறுவனம் தான் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம்.

கிழக்கு நியூஸ்

அமெரிக்காவைச் சேர்ந்த ஷார்ட் செல்லர் நிறுவனமான ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் மூடப்படுவதாக நிறுவனர் நேட் ஆண்டர்சன் அறிவித்துள்ளார்.

"ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தை மூட முடிவு செய்துள்ளேன். தற்போது நாங்கள் பணியாற்றி வரும் திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டவுடன், நிறுவனத்தை மூடுவது திட்டம்" என்று நேட் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.

பல்வேறு நிறுவனங்களுக்கு எதிராக முறைகேடு குற்றச்சாட்டுகளை வைத்துள்ள ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம், இந்தியாவில் அதானி குழுமத்துக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை வைத்து கவனம் பெற்றுள்ளது. அதானி குழுமத்துக்கு எதிராக இருமுறை வைத்த குற்றச்சாட்டுகளால், பங்குச் சந்தையில் அந்தக் குழுமத்துக்குப் பெரும் இழப்பு ஏற்பட்டது.

செபி தலைவர் மாதவி புச், அதானி தொடர்புடைய நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகக் குற்றச்சாட்டு வைத்தது.

ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் இதுபோன்று வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் அதானி குழுமம் மற்றும் மாதவி புச்சால் மறுக்கப்பட்டுள்ளன.

ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தை மூடுவதற்குக் குறிப்பிட்ட காரணம் எதையும் ஆண்டர்சன் குறிப்பிடவில்லை. அமெரிக்காவில் ஜோ பைடனின் ஆட்சி நிறைவடைந்து, அந்த நாட்டின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் ஜனவரி 20 அன்று பதவியேற்கவுள்ள நிலையில், நிறுவனத்தை மூடுவதாக நேட் ஆண்டர்சன் அறிவித்துள்ளார்.

இருந்தபோதிலும், நிறுவனத்தை மூடுவதற்கான முடிவின் பின்னணியில் எந்தவொரு அச்சுறுத்தலும், தனிப்பட்ட காரணமும், உடல்நலப் பிரச்னையும் இல்லை என்று அவர் விளக்கமளித்துள்ளார்.